தற்போது உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கும் நேரத்தில் ஏவுகணை சோதனையில் ஈட்டுப்பட்டிருக்கிறதுவட கொரியா .
வட கொரியா இரண்டு ஏவுகணைகளைச் சோதனை செய்ததாக கூறுகிறது தென் கொரியா ராணுவம். வட கொரியா இவ்வாண்டு செய்யும் முதல் ஏவுகணை சோதனை இது.
ஜப்பானை ஒட்டி உள்ள வட கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. குறுகிய தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் வகை ஏவுகணை இது என்கிறது தென் கொரியா ராணுவ தலைமை.
தென் கொரியாவும் அமெரிக்காவும் மேற்கொள்ளவிருந்த ராணுவ கூட்டுப்பயிற்சியைத் தள்ளி வைக்க அண்மையில் முடிவு செய்தது. இப்படியான சூழலில் வட கொரியா ஏவுகணை சோதனை செய்திருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் கொரியாவின் இவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஈஸ்லே 'வட கொரியா தனது ராணுவ திறனைத் தொடர்ந்து வலிமைப்படுத்த விரும்புகிறது என்பதையே இது காட்டுகிறது' என்கிறார்.
மேலும் அவர் 'தென் கொரியாவும் அமெரிக்காவும் தங்களது ராணுவ கூட்டுப்பயிற்சியைத் தள்ளி வைத்தது கிம் அரசாங்கத்திடம் எந்த நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தவில்லை' என்கிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வட கொரியா ஏவுகணை சோதனை செய்தது.
அமெரிக்காவும் வட கொரியாவும் பேச்சு வார்த்தையில் ஈட்டுப்பட்டிருந்தது. கிம் ஜோங் உன்னும் டொனால்ட் டிரம்பும் 2018-இல் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை தடைப்பட்டதை அடுத்து இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு ஆயுதத் திட்டங்களுக்கு புத்துயிர் கொடுத்தார் கிம்.
அது மட்டுமல்லாமல் மிகப்பெரிய ஏவுகணை ஒன்றை சோதனை செய்ய இருப்பதாகவும் வட கொரியா தெரிவித்து இருந்தது.
தென் கொரியா மிக மோசமாக கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 26 பேர் பலியாகி உள்ளனர். வட கொரியாவில் கொரோனாவின் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து எந்த தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment