தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று மாலை மட்டுவிலில் நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்ததாவது,
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி புதிய ஒரு அணியாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு அணியாகும். ஆரம்பத்தில் கூறப்பட்டது இந்த அணிக்கு ஒரு ஆசனம் கிடைக்கலாம் என்றும் பின்னர் இரு வாரங்கள் கடந்த நிலையில் இரண்டு ஆசனங்களைப் பெறுவார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால், இன்று நிலைமை மாறி பெரும்பான்மையான ஆசனங்களைப் பெறுவீர்கள் என்ற நிலைப்பாட்டில் மக்கள் தங்களுடைய ஆதரவினை வழங்கக் கூடியதைப் பார்க்க முடிகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாங்கள் நான்கு ஆசனங்களைப் பெற்றுவிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். கூட்டமைப்பின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் எங்களுக்கான ஆசனங்கள் கிடைப்பதை அதிகரித்துச் செல்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரனின் நடவடிக்கைகள் பல விமர்சனங்களை ஏற்படுத்துகின்றது.
அமைச்சுப் பதவிகளை பேரம் பேசி பெறுவதற்கு எங்களை பாராளுமன்றம் அனுப்பி வையுங்கள் என்று கூறுவதனை அவதானிக்க முடிகின்றது.
தந்தை செல்வாவினுடைய காலத்தில் இருந்து ஓரிரு முறையைத் தவிர தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த் தரப்பிலேயே இருந்துள்ளார்கள்.
பல அமைச்சர்கள் வேலைவாய்ப்பை பெற்றுத் தருகின்றோம், அபிவருத்தி செய்து தருகின்றோம் என்று முன்வருகின்றார்கள் மாறாக தமிழ் மக்கள் தங்களுடைய இருப்பு, கலாசாரம், மொழி, பண்பாடு ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்களே தவிர அரைகுறை விடயங்களுக்காக முக்கியத்துவம் கொடுத்ததாக வரலாறு கிடையாது.
கடந்த நான்கரை வருடங்களாக மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசிய அனைத்து பொய்யான விடயங்களா? புதிய அரசியல் சாசனம் வருகின்றது, சமஷ்டி வருகின்றது, ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிடம் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று எல்லாம் கூறியது அனைத்தும் மக்களை ஏமாற்றும் விடயங்களா? உண்மை இப்பொழுது தான் வெளிச்சத்துக்கு வருகின்றது. தமிழ் மக்களின் நலன்களை கைவிட்டு விட்டு அரசாங்கத்தைப் பாதுகாப்பதையே தங்களின் நலன்களாக கொண்டுள்ளார்கள்.
30 வருட யுத்தம், போராட்டங்கள் அனைத்துமே இந்த மண்ணில் தமிழர்கள் தமிழர்களாக வாழ வேண்டும், உரிமையுடன் வாழ வேண்டும், தமது சொந்த காலில் நிற்க வேண்டும், யாருக்கும் அடிபணியா வாழ வேண்டும் என்பதற்காகத்தான். எமது உரிமைகளைப் பெற்றுக் கொண்டால் மாத்திரமே தமிழர்கள் தமிழர்களாக வாழ முடியும் என்ற காரணத்தால் தான் வாக்களித்து வந்தோம்.
ஆனால் இன்று சம்பந்தன் கூறுகின்றார் நாம் ஐக்கியப்பட வேண்டும் என்று ஐக்கியப்படுவதற்கும் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கும் எந்தவிதமான தேவை உள்ளது என்பது தெரியவில்லை.
எமது மக்களின் இருப்புக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். யுத்தத்துக்குப் பின்னராக தமிழ் மக்களின் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழர் பிரதேசங்களில் புத்தர் கோயில்கள் கட்டப்படுகின்றன. புத்த கோயிலை சுற்றி சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றார்கள். எமது புராதன சின்னங்கள் அனைத்தும் சிங்கள பௌத்த சின்னங்கள் என்று கூறி கைப்பற்றப்படுகின்றன.
இந்த அரசாங்கம் தான் விரும்பிய அனைத்தையும் செயல்களையும் சட்டத்துக்கு விரோதமாக செய்கின்றது. இப்படியான ஒரு சூழலில் அரசாங்கத்துடன் சேர்ந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றால் இவை அனைத்தையும் பாதுகாக்க முடியாது. மாறாக அரசாங்கம் என்ன முடிவு எடுக்கின்றதோ அனைத்துக்கும் நாம் கட்டுப்பட்டவராகவே இருக்க வேண்டும்.
அபிவிருத்தி என்ற விடயத்தை பார்க்கும் போது வீதி போடுதல், குழாயில் நீர் கொடுத்தல் மாத்திரமல்ல அது தேவையான ஒரு விடயம். அபிவிருத்தி என்பது இளைஞர்கள், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்துவதாகும்.
வேலைவாய்ப்பினை உருவாக்கிக் கொள்ளக் கூடிய அபிவிருத்தியாக இருத்தல் வேண்டும். தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும். இலங்கை அரசாங்கம் வடக்கு, கிழக்கில் முதலீடுகளை செய்யவே மாட்டார்கள். புலம்பெயர் தேசங்களிலுள்ள எமது மக்கள் 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வாழ்கின்றார்கள்.
அதில் ஒரு சில நூறு பேர் இங்கு முதலீடுகளை செய்வார்களாக இருந்தால் எமது பிரதேசங்களில் தொழிற்சாலைகள் உருவாக்கி வேலைவாய்ப்பு இல்லாத அனைவருக்கும் வேலைவாய்ப்பினை வழங்க முடியும். அதற்கான அதிகாரங்கள் எமக்கு தேவை. அவற்றுக்கான அதிகாரங்கள் மாகாண சபைக்கு தேவை. இவை கிடைத்தால் அரசிடம் கையேந்தும் நிலை எமக்கு இருக்காது.
இன்று உலகில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது;. கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் உலக சமுதாயத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னர் இருந்த சீனா அல்ல இப்போது இருப்பது நாளை இதை விட பெரிய மாற்றங்கள் ஏற்படலாம். அதுபோலவே இந்த மாற்றம் என்பது மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக் கொடுக்கும்.
ஆகவே, எமது இருப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அந்த இருப்பை பாதுகாக்கும் வகையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஏற்படுத்தும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம். – என்றார்.
Post a Comment