ஒரு பல்கலைக்கழக ஆசிரியராக இருந்து கொண்டு சட்டத்தரணி தொழிலில் ஈடுபடுவதோ அல்லது சமூக ஈடுபாடுகளில் நேரம் செலவழிப்பதோ தற்போது இருக்கக் கூடிய பல்கலைக்கழக நெறிமுறைகளுக்கு இசைவான ஒன்றா? என யாழ் பல்கலைக்கழக முதுநிலை சட்டத்துறை விரிவுரையாளரும்இ சட்டத்தரணியுமான கலாநிதி குருபரன் குமரவடிவேல் அவர்களிடம் கேட்டபோது அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு
பல்கலைக்கழக ஆசிரியர்கள் அரச ஊழியர்கள் அல்ல. 1978 ஆம் ஆண்டு இலக்கம் 16 பல்கலைக்கழக சட்டம் மிக தெளிவாக எங்களை அரச ஊழியர் அல்ல என்பதற்கான பல ஏற்பாடுகளை சொல்கிறது. அரச ஊழியராக இருந்து பின் பல்கலைக்கழக ஆசிரியராக வருவீர்களாக இருந்தால் அரச ஊழியர் தகைமையை இழப்பீர்கள் என சொல்கிறது.
பல்கலைக்கழக ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய முடியாது. பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்குவதுஇ ஆசிரியர்களின் ஒழுக்காற்று விடயங்கள்இ பதவி உயர்வுகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வது அந்தப் பல்கலைக்கழகம் தான்.
சட்டத்தரணியாக இருந்து கொண்டு பல்கலைக்கழக நேரத்தில் போகலாமா என்ற கேள்வி முன்வைக்கப்படுகின்றது.
பல்கலைக்கழகங்களுக்கு என்று தாபன விதிக் கோவை தனியே இருக்கிறது. அதன் அத்தியாயம் 20 பந்தி 2.1 மிகத்தெளிவாக சொல்கிறது. பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு வேலை நேரம் என்ற ஒன்று இல்லை என்று. வேலை நேரம் இல்லை என்றால் எங்கள் பொறுப்புக் கூறலை எப்படி செய்கிறோம் என்றால் அதற்கு வேலை தொடர்பிலான ஒழுக்க விதிகள் இருக்கிறது.
பொதுவாக நீதிமன்ற நேரமும் காலையில் இருந்து மாலை வரையான நேரம் தான். இந்த நேரத்துக்குள் நாங்கள் விரிவுரைகளை குந்தகம் இல்லாமல் நாங்கள் இணங்கிக் கொண்ட நேர சூசிக்கு ஏற்றவாறு நாங்கள் சட்டத்தரணியாக கடமையாற்றுவதற்கு உரிய உரிமை பல்கலைக்கழக தாபன விதிக் கோவைக்கமைய இருக்கிறது.
முக்கியமாக இராணுவத் தலையீடு ஒரு புறம் இருக்கஇ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆட்சிக்கு கீழ் தாங்கள் இருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகங்கள் கருதுவது மிக அடிப்படையான பிழை. ஒரு ஆசிரியரின் வேலையை நெறிப்படுத்துவதற்கான முழுமையான அதிகாரம் பல்கலைக்கழகத்துக்கு தான் இருக்கிறது.
நான் வெளியே போய் சட்டத்தரணியாக கடமையாற்றலாமா இல்லையா என்பதை சொல்ல வேண்டியது யாழ்ப்பாண பல்கலைக்கழகம். இவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை கேட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை.
சுயநிர்ணய உரிமையை கேட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு இனம் இந்த ஆசிரியரை சட்டத்தரணி தொழிலில் ஈடுபடுவதை அனுமதிப்பதை முதலில் தீர்மானித்து அந்த உரிமையை வழங்கி விட்டு இப்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சொல்லி விட்டது என்பதற்காக அந்த உரிமையை இல்லாமல் பண்ணுவது எனக்குப் பிரச்சினையாக உள்ளது.
ஒரு தவணையில் எடுக்க வேண்டிய விரிவுரை மணித்தியாலங்கள் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதை தவிர நாங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். பரீட்சை வினாத்தாள்களை தயாரிக்க வேண்டும். திருத்த வேண்டும். சமூகத்தோடு ஊடாட்டம் வைத்திருக்க வேண்டும். நாங்கள் ஒரு தொழில் துறை சார்ந்தவர்களாக அதற்குரிய பங்களிப்பை வழங்கலாம் என்கிற ஏற்பாடுகள் உள்ளது.
Post a Comment