2020 பாராளுமன்றத் தேர்தல் மிக முக்கிய தேர்தல் களமாக அமைந்;துள்ளது. தமிழ் மக்களின் எதிர்கால பலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக அமையப் பெற்றிருப்பதனால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் இம்மானுவல் ஆனல்ட் ஊர்காவற்றுறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது கருத்து வெளியிட்டிருந்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது.
எமது மக்கள் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையே ஆதரித்து தமது ஏகோபித்த ஆதரவை வழங்கி வந்திருக்கின்றார்கள். நாம் தற்பொழுது நாட்டில் உள்ள அரசியல் நிலைமைகளை அவதானிக்கின்ற பொழுது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
கடந்த பாராளுமன்ற காலத்தில் மக்கள் நலன் சார் பல்வேறு விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்திருக்கின்றது. அதன் தொடராக எமது நீண்டகால கோரிக்கையான நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை முன்னர் பலப்படுத்தியதை போன்று மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியான பயணத்தை முன்னெடுப்பதற்கு மக்கள் மீண்டும் தமது ஆதரவை வழங்க வேண்டும். அதிகளவான பாராளுமன்ற உறுப்பினர் பலத்துடன் கூட்டமைப்பு செல்கின்ற பொழுதுதான் எம்மால் பேரம் பேச முடியும்.
எமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்த முடியும். தென்னிலங்கையில் கூட்டமைப்பிற்கு எதிராகவே பேசப்படுகின்றது. தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர் குழைப்பதற்காக வடக்கு கிழக்கில் அரசின் முகவர்களாக களமிறக்கப்பட்டிருப்பவர்களும் அதனையே மேற்கொண்டு வருகின்றனர். இது எமது மக்களின் எதிர்காலத்தை பாதிக்க வழிவகுக்கும்.
எனவே தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தின் பாதையில் மக்கள் நலன் சார்ந்து தொடர்ச்சியாக செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழமை போன்று இம்முறையும் தமது வாக்குகளை வழங்கி தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் என்பதை நாட்டிற்கும் - சர்வதேசத்திற்கும் சொல்ல வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். அதுவே தமிழ் மக்களின் இருப்பை தக்கவைப்பதற்கும், பாதுகாப்பதற்கும் உரிய ஒரே ஒரு தெரிவாகும் என்றார்.
Post a Comment