தமிழர்களின் ஏகோபித்த சக்தியாக கூட்டமைப்பை தெரிவு செய்ய வேண்டும் - ஜெயசேகரன் கோரிக்கை - Yarl Voice தமிழர்களின் ஏகோபித்த சக்தியாக கூட்டமைப்பை தெரிவு செய்ய வேண்டும் - ஜெயசேகரன் கோரிக்கை - Yarl Voice

தமிழர்களின் ஏகோபித்த சக்தியாக கூட்டமைப்பை தெரிவு செய்ய வேண்டும் - ஜெயசேகரன் கோரிக்கை

எதிர்வரும் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடைய தாயகம் என்பதை உறுதிப்படுத்தி ஒரு நீதியான தீர்வைப்பெற உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தமிழர்களின் ஏகோபித்த சக்தியாக செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பை தெரிவு செய்வோம் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும்  யாழ் வணிகர் கழகம்  முன்னாள் தலைவருமான இ.ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த பின்பு அப்போதிருந்த அரசு தனிச்சிங்கள நாடாக சித்தரித்து அதற்குரிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது. அதற்குரிய வேலைத்திட்டங்களாக தனிச் சிங்கள மொழிச்சட்டம் கொண்டுவரப்பட்டமை, தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் சிங்கள குடியேற்றம், தமிழர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் புறக்கணிப்பு, தமிழ் பகுதியின் அபிவிருத்தியில் பாராபட்சம், 

தமிழ் மாணவர்களுக்கான கல்வி தரப்படுத்தல் முறைமை, பொருளாதார ரீதியில் முன்னணி வகித்த தமிழர்களை கலவரங்களை ஏற்படுத்தி பொருளாதார ரீதியில் அழித்தமை, தமிழர்களுடைய வரலாற்று இடங்களை தொல்பொருள் திணைக்களம், வனவளத்திணைக்களம் மூலம் கையகப்படுத்தல் அல்லது பௌத்த விகாரை அமைத்தல், தமிழர்களுடைய வரலாற்று சுவடுகள், பொக்கிஷங்கள் அடங்கிய யாழ் நூல்நிலையத்தினை எரித்தமை, தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டை குழப்பி உயிர்ச்சேதத்தினை ஏற்படுத்தியமை.

இப்படியான தமிழ் விரோத கொள்கைகளை காலம் காலமாக அமுல்நடத்தி வந்துள்ளார்கள். அண்மைக் காலமாக பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்கள் அமைந்த இடங்கள் தங்களுக்குரித்தானதென்றும், வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழர்களுடைய தாயகம் இல்லை என்றும், தமிழர்கள் சுயாட்சி கேட்டால் இரத்த ஆறு ஓடும் என்று சொல்கிறார்கள். 

இப்படியானவர்களுக்கா தமிழ் மக்கள் வாக்களிக்கப் போகின்றார்கள்? இவற்றையெல்லாம் கவனத்திலெடுத்து தமிழ் மக்கள் தங்கள் வாக்கை பிரயோகிக்க வேண்டிய காலகட்டம் இது. நாங்கள் தென்னிலங்கை சக்திகளுக்கு அழிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் இவை  எல்லாவற்றையும் அங்கீகரிப்பதாக முடிந்து விடும். 

ஆகையால் தமிழ் மக்களே நன்கு சிந்தித்து செயற்படுங்கள். 1949ம் ஆண்டு தந்தை செல்வா தமிழரசு கட்சியை ஆரம்பித்ததில் இருந்து ஒரே கொள்கையான சமஸ்டி கொள்கையை முன்னிறுத்தி வந்துள்ளார். அந்த அடிப்படையிலே தந்தை செல்வாவினால் மேற்கொள்ளப்பட்ட பண்டா செல்வா, மற்றும் டட்லி செல்வா ஒப்பந்தங்கள் அமைந்தன. 

அந்த ஒப்பந்தங்களைக்கூட அமுல்நடத்தாமல் தூக்கியெறிந்தது இலங்கை அரசு. வேறு வழியின்றியே வயது முதிர்ந்த காலத்தில் தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தனிவழி போவதற்காக வட்டுக்கோட்டை தீர்மானத்தை 1976ம் ஆண்டு நிறைவேற்றினார்கள். 

அதற்கான செயல்வடிவை கொடுக்க முற்பட்டவர்களே தமிழ் இளைஞர்கள். இளைஞர்களின் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு சில புத்த பிக்குகளும், தென்னிலங்கை அரசியல் வாதிகளும் இனவாதம் பேசுகின்றார்கள், போரில் வெற்றிபெற்றுவிட்டோம் என்ற மமதையில் தமிழர்களை அடக்கி ஆழ முற்படுகின்றார்கள். 

ஆகையால் அன்பார்ந்த தமிழ் மக்களே இந்தியா உட்பட்ட சர்வதேசத்தின் ஆதரவுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் சுயாட்சி அதிகாரமுள்ள ஒரு நியாயமான தீர்வை நோக்கி முன்னெடுத்துச் செல்கின்ற இவ்வேளையிலே கடந்த 72 வருடங்களாக இனவிடுதலைக்காக போராடிய தமிழ் மக்களுடைய நோக்கம் நிறைவேற தமிழ் மக்களாகிய நாங்கள் உரிமைப் போராட்டத்தில் உறுதியாகவும், பற்றுறுதியுடனும் இருக்கின்றோம் என்பதை தென்னிலங்கைக்கும், உலகிற்கும் உறுதியாக தெரிவிப்பதற்கு உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துங்கள். 

ஐ.நபிரகடனத்தின்படி எமக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. ஆனால் இலங்கைத் தமிழ் மக்களுக்கு அது மறுக்கப்டுகின்றது. உள்ளக சுயநிர்ணய அடிப்படிடையில் எங்களுக்கு எங்களை ஆழ உரிமையுள்ளது. அதை அரசும், சிங்கள இனவாதிகளும் வழங்க மறுக்கின்றார்கள். 

அதை நாம் பெறுவதற்கு மட்டுமே அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும். உரிமைகள் கிடைக்காமல் அரசுடன் சேர்ந்து இயங்கினால் எமது உரிமைப்போராட்டம் அழிந்து விடும்.  கடந்த 72 வருடங்களாக எமது உரிமைக்காக அகிம்சை, ஆயுத வழிகளில் போராடி பல உயிர்களை இழந்த எமது போராட்டத்தை வீணடிக்காமல் எமது இனம் தனித்துவமாக தேர்தலில் வெற்றியடைய வேண்டும். 

ஆகவே வடக்கு கிழக்கு தமிழர்களுடைய தாயகம் என்பதையும், எமக்கு சலுகைகள் அல்ல உரிமைகளே தேவை என்பதையும் உறுதிப்படுத்த ஒரு வாக்கைக் கூட வீணடிக்காமல் அதிகளவானோர் தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து தமிழ்த்தேசிய கூட்மைப்பின் வேட்பாளர்களை வெற்றியடையச் செய்யுங்கள். இதன் மூலம் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் தமிழர்களின் பலமான ஏகோபித்த அரசியல் சக்தியாக செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பை தெரிவுசெய்து அங்கீகாரத்தை வழங்குங்கள்.

'

0/Post a Comment/Comments

Previous Post Next Post