கடந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் குழப்பங்கள் பிரச்சனைகள் இருக்கின்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அந்தத் தேர்தலுக்கு யாழில் பொறுப்பாக இருந்த அதிகாரி தற்போது இளைப்பாறிய நிலையில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்க வேண்டிய அவசியம் என்ன என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் வேட்பாளருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழிலுள்ள கட்சி அலுவலகத்தில் ஊடகங்களைச் சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..
கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நடந்த தேர்தல் தொடர்பில் சில பிரச்சினைகள் உள்ளதாக என்னிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தேர்தல் முடிவுகள் முழுநாளும் தாமதித்து மறுநாள் பிற்பகலே வெளியிடப்பட்டது.
அந்த நேரத்தில் அதற்கு பொறுப்பாக இருந்தவர் மொகமட் என்னும் உத்தியோகஸ்தராகும். அப்பாது தேர்தல் அதிகாரியாக இஇருந்த அவர் இப்போது இளைப்பாறிவிட்டார். இருப்பினும் அவரை முக்கியமாக தேர்ந்தெடுத்து மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.
2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் முடிவுகளில் பல பிழையான சம்பவங்கள் நடந்ததான எனக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பிழையான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை என்பது உண்மைதான். ஆனால் பொதுவாக தமிழ் மக்களிடையே அன்று நடந்த சம்பவம் தொடர்பாக பல கருத்துக்கள் உள்ளன.
இம்முறை தேர்தலிலும் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்கான சூழ்நிலையே உள்ளது. அன்றைய பிழையான சம்பவங்கள் நடைபெற்றதற்கு முக்கியமாக இருந்த நபரான மொகமட்டை திரும்பவும் இங்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி எழுகின்றது.
அதுவும் அவர் இளைப்பாறிய பின்னர் அவரை தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணம் என்ன? தேர்தல் திணைக்களத்தில் உள்ள யாராவது ஒரு சிரேஸ்ட தமிழ் அதிகாரியாயை இங்கு அனுப்பாமல் மொகமட்டை இங்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?
யாழ்ப்பாணத்திற்கு மட்டும்தான் இவ்வாறு அதிகாரி ஒருவரை அனுப்பியுள்ளார்கள். ஏனைய மாவட்டங்களுக்கு இது போன்ற அதிகாரிகள் எவரையும் தேர்தல் ஆணைக்குழு அனுப்பவில்லை.
இதற்கு பின்னல் அரசாங்கம் எவ்வகையான எண்ணங்களை வைத்திருக்கின்றது என்பது தொடர்பில் சரியாக விளங்கவில்லை. ஆனால் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்பது கணிப்பு என்றார்.
............................................................................
Post a Comment