நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று உரெழுவில் உள்ள என்.கே மண்டபத்தில் மாலை 7 மணிக்கு இடம்பெற்றது.
இந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்திற்கு கட்சியின் வேட்பாளர்களான முன்னாள் முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்தின், க.சிவாஜிலிங்கம், ந.சிறீகாந்தா, த.சிற்பரன், அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
அங்கு கருத்து தெரிவித்த சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்ததாவது,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆணையை மீறி செயற்பட்டதன் காரணத்தால் தான் இந்த புதிய கூட்டணியான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உருவாகக் காரணம்;.
தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எட்;ட முடியவில்லை. தந்தை செல்வா காலத்தில் அறவழிப் போராட்டம் 30 வருடங்களுக்கு மேல் நடைபெற்றது.
எல்லா வழிகளிலும் முயற்சித்து பார்த்தும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் கிடைக்கவில்லை. அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்ட பின்னரே தனி நாட்டு தவிர மாற்றுவழி இல்லை என வட்டுக்கோட்டை தீர்மானம் உருவாகிய போது தந்தை செல்வா கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்தே ஆயுதப் போராட்டம் 35 வருடங்களாக நடைபெற்றது.
ஆனால், அதுவும் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய பின்னர் தமிழ் மக்களுக்கான தேசிய பிரச்சினைகள் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சர்வதேச ரீதியாக ஆதரவுகள் உள்ளன ஆகவே இனப்பிரச்சினைக்கான தீர்வை பெறுவோம் என்று கூறினார்கள். ஆனால், தமிழ் இனப்பிரச்சினைக்கான எந்த முடிவையும் எட்டவில்லை.
இப்போது சுமந்திரன் கடந்த ஒரு கூட்டத்தில் தெரிவித்திருக்கின்றார் நாங்கள் அமைச்சுப் பதவிகளை எடுக்க இருக்கின்றோம். நல்ல அமைச்சுப் பதவிகளை எடுப்பதற்கு அதற்காக பேரம் பேசுவதற்கு எங்களுக்கு ஒரு வலுவான பாராளுமன்றகுழு தேவை என்று கூறியிருந்தார். அரசாங்கத்துடன் தாங்கள் பேசி தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்போம் என்று கூறியவர்கள் இன்று பேரம் பேசி அமைச்சுப் பதவிகளை பெறுவதற்கு ஆசைப்படுகின்றார்கள்.
சுமந்திரனை பொறுத்தவரை அவருக்கு இலங்கையினுடைய வெளிவிவகார அமைச்சராகுவதற்கு விருப்பம் இருந்தது. முன்னாள் வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமருக்குப் பின்னர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக தான் இருக்க வேண்டும் என்பதில் அதிக விருப்பம் இருக்கிறது.
அதனால் தான் பேரம் பேசி அமைச்சுப் பதவி பெறுவதற்கு வலுவான பாராளுமன்ற குழுவை கேட்டு நிற்கின்றார். அது மட்டுமல்லாமல், தழிழரசுக் கட்சியினுடைய மாதர் பேரவையினுடைய தலைவி ஒரு பாரிய குற்றச்சாட்டை தன்னுடைய கட்சி மீது சுமத்தியிருந்தார்.
கனடாவில் இருந்து 21 கோடி ரூபா அனுப்பப்பட்டதாகவும், அந்தப் பணம் கணவனை இழந்த பெண்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாத பெண்களுக்கான பணம் என்று அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இப்போது வங்கியிலும் பணம் இல்லை. எந்த ஆவணங்களும் கிடையாது. திருகோணமலை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் குகதாசன் கனடாவில் இருந்து வந்து போட்டியிடுகின்றார்.
அவர் தனது கணனியில் பணம் அனுப்பியதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கூறியிருக்கின்றார். சுமந்திரன் தான் அந்த பணத்தை கொண்டு வந்ததார் எங்கே போனது அந்தப் பணம் என்று கேட்டதற்கு மாவைசேனாதிராஜாவும் கட்சியின் செயலாளரும் இணைந்து அந்தப் பெண்ணிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு எந்த விசாரணையும் இன்றி கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார்.
ஒன்றரை வருடமாக கஜேந்திரகுமாருடன் பேசியிருந்தோம் எமது கூட்டணியில் இணையும்படி ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள். தனித்து நின்று எதனையும் சாதிக்க முடியாது. கூட்டாக இணைந்தால் தான் எதனையும் பெற முடியும். தேர்தலின் பின்னர் இன்னும் எமது கூட்டணி விரிவுபடுத்தப்படும். தமிழ் மக்களினுடைய கோரிக்கைகளை வென்றெடுக்க கூடிய பாரிய கூட்டணியாக இது மாற்றுவதற்கான முயற்சிகளை செய்வோம் என்று கூறியிருந்தார்.
Post a Comment