யாழ்.மாவட்டத்தில் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் அழுத்தங்கள் ஏதுமின்றி தமது கடமைகளை ஆற்றுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும்.தென்னி லங்கையிலிருந்து வருகை தந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் எதிர்வரும் நாட்களில் வெளியேற்றப்படவேண்டும்.
அரசு அதனை செய்ய தவறுமிடத்து யாழ்.குடாநாட்டில் பெருமெடுப்பிலான போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக மீனவ அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் மற்றும் யாழ்.மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சம்மேளனம் என்பவற்றின் கூட்டிணைந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றிருந்தது.
அப்போதே இவ்வெச்சரிக்கையினை மீனவ அமைப்புக்கள் விடுத்துள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா அண்மையில் வடமராட்சி கிழக்கில் வத்திராயன் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முற்பட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
பொது ஜனபெரமுனவின் பங்காளி கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் வேட்பாளர் ஒருவர் அதிகாரிகளை பணியாற்ற விடாது தடுத்ததுடன் சட்டவிரோத மாக பிடிக்கப்பட்ட மீனை எடுத்து செல்ல உதவியதுடன் கைது செய்யப்பட்ட மீனவர்களை காப்பாற்றி விடுவித்துள்ளார்.
அவரது இத்தகைய செயற்பாடுகளிற்கு எதிராகவும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் பளை காவல்துறை மற்றும் இலங்கை கடற்படையினரிடம் உதவி கோரிய போதும் எத்தகைய உதவியும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
சட்டவிரோத மீன்பிடியை கட்டுபடுத்தவென அழைத்துச்செல்லப்பட்ட அதிரடிப்படையினர் கூட அதிகாரிகளை வெளியேற்றுவதிலேயே மும்முரமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் சட்டவிரோத மீன்பிடிகாரரிற்கு தொழில் அனுமதியை வழங்க அதிகாரிகளை மிரட்டிய பளை காவல்துறை பொறுப்பதிகாரி தற்போது தடை செய்யப்பட்ட மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களிற்கு ஆதரவாக அவர்களது படகுகள்,வெளியிணைப்பு இயந்திரங்கள் களவாடப்பட்டதாக குற்றஞ்சுமத்தி அதிகாரிகளை உள்ளே தள்ள முற்பட்டுள்ளார்.
உரிய அனுமதிகள் ஏதுமற்றதான குறித்த படகுகள் மற்றும் வெளியிணைப்பு இயந்திரங்கள் காணாமல் போயிருப்பதாக கூறி எதிர்வரும் வெள்ளிக்கிழமை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளை பளை காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைததுள்ளனர்.
அதிகாரிகள் மீதான மிரட்டல்களை அரசியல்வாதிகள்,காவல்துறை மற்றும் கடற்படை நிறுத்த வேண்டும்.அவர்கள் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.தென்னி லங்கை மீனவர்களது வருகை தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
அரசு இவ்விடயத்தில் தகுந்த நடவடிக்கையினை எடுக்காவிடின் குடாநாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக மீனவ பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறிய வருகைக்கு எதிராக வடமராட்சி வடக்கு மீனவ அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் தொழில் புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவாக குடாநாடு தழுவிய ரீதியில் ஏனைய மீனவர்களும் இணைந்து கொள்வது தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment