தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று என்று யாரும் இல்லை. இது தொடர்பில் எமது தமிழ் மக்கள் மிகத் தெளிவாகவுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ்.-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் இளம் வேட்பாளரும் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பாலச்சந்திரன் கஜதீபன் உறுதிபடத் தெரிவித்தார்.
கேள்வி:- 2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்பு நீங்கள் போட்டியிடும் தேர்தல் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல். இரண்டு தேர்தல்களுக்கும் இடையிலான களநிலவரம் எவ்வாறு உள்ளது.
பதில் :- இரண்டு தேர்தலுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. ஆனால், தேர்தலுக்கு என்று விசேஷமாகத் தயாராக வேண்டிய தேவையை நான் இன்னும் உணரவில்லை.
மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக நான் ஒரு ஆசிரியராக இருந்தேன்.
பல ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களோடு பழகக் கூடிய வாய்ப்புக்களை அதன் ஊடாகப் பெற்றுக்கொண்டேன்.
அதன் பின்னர் மாகாண சபைக்கு வந்த பின்பு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மக்களை அதிகளவில் சந்திக்கக் கூடியதாக இருந்தது.
அதேவேளை எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களுடைய செயலாளராக செயற்பட்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்னின்று செயற்படுத்தினேன்.
இவ்வாறு மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக பயணித்து வருபவன். எனவே தேர்தலுக்காக மக்களைச் சந்திக்க வேண்டிய தேவை எனக்கு இன்னும் ஏற்படவில்லை.
ஆனால், அன்றிருந்த அரசியல் களநிலவரத்திற்கும் இன்றிருக்கக் கூடிய களநிலவரத்திற்கும் இடையே வித்தியாசம் உண்டு.
அன்றைய நிலையிலே மிகப்பெரிய எழுச்சியை எமது மக்கள் காண்பித்திருந்தனர். 1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து தேர்தல் களத்தில் நின்ற போது ஏற்பட்ட எழுச்சியைப் போன்ற எழுச்சி 2013 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் மாபெரும் எதிர்பார்ப்பை மக்கள் பிரதிபலித்தனர்.
அதனடிப்படையில் பார்க்கையில் இன்றைய நிலைமையை விட மாகாண சபைத் தேர்தல் காலத்தில் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது உண்மைதான்.
கேள்வி:- அரச தரப்பிற்கு எதிராகப் போட்டியிட்டு வந்த நிலையில் தற்போது இங்கேயே பல்வேறு அணிகள் உருவாகியுள்ள களசூழலை எவ்வாறு எதிர்கொள்கின்றீர்கள்?
பதில்;;:- எமது மக்களைப் பொருத்தவரை எந்தத் தேர்தலுக்கு எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாகவுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலின் போது பார்த்தீர்கள் என்றால், சஜித் பிரேமதாஸவா, கோத்தாபய ராஜபக்ஷவா என்று கேள்வி வந்தபோது சஜித் பிரேமதாஸவிற்கு மிகப்பெருவாரியாக தமது வாக்குகளை வழங்கியிருந்தனர்.
ஆனால், இருவருமே சிங்கள பௌத்த தலைவர்கள் தான். கோத்தாபய ராஜபக்ஷவிற்கு சற்றும் சளைத்தவராக சஜித் பிரேமதாஸ இருக்கவில்லை.
அவரும் சிங்கள பௌத்த குடிமகனாகத் தான் இருந்தார்.ஆனாலும் மக்கள் அவ்வாறான ஒரு முடிவை எடுத்தனர். அதுமாத்திரமல்ல ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் அவ்வாறான முடிவைத் தான் மக்கள் எடுக்கின்றனர். அண்மையில் நான் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
அதாவது, 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது குமார் பொன்னம்பலம் பெற்றுக்கொண்ட வாக்குகளை விட இங்கே சிங்கள வேட்பாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட வாக்குகள் அதிகம்.
ஆனபடியால், இந்த மாவட்ட மக்கள், மாகாண மக்கள் சிங்களத் தலைவர்கள் பின்னால் சிங்களக் கட்சிகளின் பின்னால் அணிதிரண்டு விட்டார்கள் என்று அர்த்தமல்ல.
யாருக்கு எந்தக்களச் சூழ்நிலையில் வாக்களித்தால் நன்மைபயக்கும் என்பதை எமது மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
அந்தவகையிலே இந்த நாடாளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை எமது மக்களிடம் நாம் வலியுறுத்தி சொல்லவிரும்புவது, வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் குறிப்பாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பலமான கட்டமைப்பைத் தாண்டி மாற்று அணி, மாற்றுத் தலைமை என்று கூறக்கூடியவர்களால் வெற்றிபெற முடியாது.
சில வேளைகளில் கருணா அம்மான், பிள்ளையானுக்கு சில வாக்குகள் விழக்கூடும். ஆனால், அவர்கள் எங்களுக்குப் போட்டியல்ல. அவர்களை தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளாக மக்கள் அங்கீகரிக்கப் போவதில்லை.
அதேபோன்றுதான் வன்னியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றுச் சக்தியாக யாரும் கிடையாது. அங்கே முஸ்லிம் சகோதரர்கள் பெறக்கூடிய வாக்குகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளாக அமையப் போவதில்லை.
யாழ்ப்பாணத்தில் மாத்திரம் பல கட்சிகள் போட்டியிடுகின்றன. வன்னியிலும் கிழக்கிலும் கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணி என்ற ஒரு அணி இல்லை.
யாழ்ப்பாணத்தில் மாத்திரம் பல கட்சிகள் களத்தில் உள்ளன. சில நேரங்களில் அவர்களில் ஒருவர் தேர்தலில் வெற்றிபெறலாம். ஆனால் அவர்களால் பலமிக்க அமைப்பாக உருவாக முடியாது.
நாங்கள் சென்ற முறை 16 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டோம். இம்முறை 15, 14 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டாலும் கூட ஒரு சில ஆசனங்கள் எமக்கு இல்லாமல் போய் அவர்களுக்கு கிடைப்பதன் மூலம் பலமிக்க அமைப்பாக அவர்களால் உருவாக முடியாது என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
ஆகவே, ஒரு பலமிக்க அணியோடு பலசாலியாக சேர்ந்து பயணிப்பதைத் தான் எங்களுடைய மக்கள் காலாகாலமாக எமது மக்கள் கடைப்பிடித்து வந்திருக்கின்றனர்.
அது தமிழரசுக் கட்சியின் வரலாறாக இருக்கட்டும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வரலாறாக இருக்கட்டும் அதற்குப் பிறகு போராட்ட இயக்கங்களின்; வரலாறாக இருக்கட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வரலாறாக இருக்கட்டும் எப்பொழுதும் தமிழ் மக்கள் தங்களுக்கு உதிரிகளாக இருப்பவர்களை நிராகரித்தே வந்துள்ளனர்.
ஓன்றுபட்ட, ஒற்றுமைப்பட்ட பலமிக்க சக்தியாக யார் இருக்கின்றனரோ அவர்களோடு தான் பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.
அந்தப் பயணத்தை எமது மக்கள் இன்றும் தொடர்கின்றனர் இனியும் தொடர்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு அசைக்க முடியாதுள்ளது.
கேள்வி:- நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான் அரசியலுக்கு கொண்டுவந்தது. அவ்வாறு கொண்டுவந்துவிட்டு இப்போது அவரை எதிர்த்துப் பிரசாரம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. இவ்வாறான இக்கட்டான நிலையை எவ்வாறு எதிர்கொள்கின்றீர்கள்?
பதில்:- விக்னேஸ்வரன் ஐயா அவர்களை இந்தக் களத்திற்கு கொண்டுவரும் போது ஆரம்பத்தில் சில சலசலப்புக்கள் ஏற்பட்டன. இருந்தாலும் கூட ஒட்டுமொத்தமாக நான் உட்பட தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசும் போது விக்னேஸ்வரன் ஐயாவிற்கு தங்களுடைய ஒரு வாக்கை அதுவும் முதலாவதாக அளித்துவிட்டுத்தான் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மேடைகள் தோறும் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்திருந்தோம்.
எங்களுடைய எல்லாத் தலைவர்களும் பேசியிருந்தனர்.அப்படியாக பேசி கிடைத்தவை தான் ஒரு இலட்சத்து 32 ஆயிரம் வாக்குகள்.
ஆகவே, எல்லோருடைய கூட்டு உழைப்புக்கும் கிடைத்த வெற்றி தான் அது. அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக அவர் அரசியலுக்குள் வந்ததால் கிடைத்த வெற்றியாகத் தான் அதனை நாம் பார்க்கின்றோம்.
ஆனால், இன்று அந்தச் சூழ்நிலை இல்லை. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராக இருந்தார். யாருடைய முதலமைச்சராக இருந்தார் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சராக இருந்தார்.
அன்றைக்கு அவர் ஒரு அறிக்கை கொடுக்கின்றார். மிகவும் சூட்சுமாக நீங்கள் வீட்டுக்கு வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்கிறார். ஆனால், அவரின் கோரிக்கை மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
வீட்டுக்கு ஆதரவாக மக்கள் பெருவாரியாக வாக்களித்தனர்.
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் மட்டும் 7 ஆசனங்களில் 5 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டது. ஆறாவது ஆசனத்தை வெறும் 6 வாக்குகளால் இழந்தோம்.
அன்று மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியைப் பெற்றிருந்த கவர்ச்சிகரமான முதலமைச்சராக இருந்த போது விடுத்த கோரிக்கையே மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
மாகாண சபை கலைக்கப்பட்டு சில ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தனிக் கட்சியை ஆரம்பித்துள்ளார். அவர் தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு பட்ட பேச்சுக்கள் உள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக வந்தார். அந்தக் கட்சியில் இருந்து கொண்டே ஒற்றுமையீனமான செயற்பாடுகளுக்குத் துணைபோயிருக்கக் கூடாது என்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் மிகப்பெருமளவில் உள்ளது.
அரசியல் ரீதியாக அவரின் தற்போதைய செயற்பாடுகள் நிச்சயமாக தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு உடைவுகளை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment