ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளியேறிய முருகேசு சந்திரகுமார் எமது கட்சிக்கு சவாலானவர் அல்ல எனவும் அவரது வெளியேற்றத்தின் பின்னரே வன்னி நிலப்பரப்பில் எமது கட்சி வரலாற்று வெற்றியை பதிவு செய்து முன்னோக்கி சென்றுள்ளது என்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (10) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
தன்னை ஒரு தேசியவாதியாக காட்ட முயலும் சந்திரகுமாரின் அரசியல் நடவடிக்கை எமது கட்சியின் தேர்தல்கால செயற்பாடுகளுக்கு எவ்விதத்திலும் தாக்கத்தை உண்டு பண்ணியது கிடையாது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியம் பேசும் காட்சியிலிருந்து பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியடைந்துள்ளதுடன் பலர் தமது விருப்பு வாக்குகளையும் அரைவாசியாகவும் இழந்துள்ளனர்.
ஆனால் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி கடந்த தேர்தலில் ஒரு ஆசனத்தை பெற்றிருந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் மக்கள் எமது கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கையின் பயனாக யாழ்ப்பாணத்துடன் வன்னி நிலப்பரப்பிலும் ஓர் ஆசனத்தை பெற்று காலூன்றி உள்ளது. அதுமட்டுமல்லாது கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது இம்முறை எமது தலைவருக்கு தமிழ் மக்கள் இரட்டிப்பான விருப்புவாக்குகளை வழங்கியுள்ளதுடன் தமது பிரதிநிதியாக ஏழாவது தடவையாகவும் நாடாளுமன்றுக்கு அனுப்பியுள்ளனர்.
அபிவிருத்திஇ அரசியல் தீர்வுஇ அன்றாட பிரச்சனை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியே பயணிக்கும்போது எமது கட்சியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தாவை மக்கள் இம்முறை தேர்தலில் பலப்படுத்தி காட்டியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது தமிழ் தேசியத்தில் பலரை உருவாக்கிய பருத்தித்துறை இன்று போலித் தமிழ் தேசிய வாதிகளால் தென்னிலங்கை கட்சிகளின் வசம் சென்றுள்ளது.
எனவே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் அபிவிருத்தி மற்றும் அன்றாட பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை கொண்ட ராஜபக்சக்களின் மக்களின் விருப்பத்திற்குரிய டக்ளஸ் தேவானந்தாவால் மட்டுமே தமிழ் மக்கள் பயணிக்க இருக்கும் பாதையை வளமாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment