நாம் எதிர்பார்த்தளவான வாக்குகள் எமக்கு கிடைக்காது விட்டாலும் யாழ் மாவட்ட மக்களும் மேலதிகமாக வன்னி வாழ் மக்களும் எமக்கு தமது ஆதரவு பலத்தை தந்து இரண்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ளனர்.
அத்துடன் இம்முறை வன்னி மாவட்டத்திலும் எமக்கு ஓரு ஆசனம் கிடைத்துள்ளது. அந்தவகையில் மக்கள் எமக்கு அளித்த அரசியல் பலத்தைக் கொண்டு தொடர்ந்தும் மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் யாழ்ப்பாண மக்கள் எமக்கு தொடர்ந்தும் வழங்கிவரும் ஆணைக்கு ஏற்ப நாம் முன்னெடுத்த பெரும் பணிகளை போன்று இன்று வன்னியிலும் முன்னெடுக்க ஒரு சந்தரப்பம் கிடைத்துள்ளது.
அதை நாம் நிச்சயமாக செயற்றிறனோடு முன்னெடுத்து எமது மக்களின் தேவைகளை முடியுமான அளவு செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இம்முறை கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் எமது வெற்றிக்காக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் அவர்களது எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைப்பாடுகள் மட்டுமல்லாது எமது மக்கனைவரது தேவைகள் அனைத்தையும் முடியுமானளவு செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று தொடர்ந்து 7 ஆவது தடவையாக தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்லும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இன்றையதினம் கட்சியின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் பெருந்திரளான மக்கள் அலைமோதியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
Post a Comment