கூட்டமைப்பு காலாவதி, மாற்று அணி ஏமாற்று - பலமான கூட்டுமுன்னணி உருவாக இத்தேர்தல் வழிகாட்டும் - மாம்பழம் ஐங்கரநேசன் உறுதிபடத் தெரிவிப்பு - Yarl Voice கூட்டமைப்பு காலாவதி, மாற்று அணி ஏமாற்று - பலமான கூட்டுமுன்னணி உருவாக இத்தேர்தல் வழிகாட்டும் - மாம்பழம் ஐங்கரநேசன் உறுதிபடத் தெரிவிப்பு - Yarl Voice

கூட்டமைப்பு காலாவதி, மாற்று அணி ஏமாற்று - பலமான கூட்டுமுன்னணி உருவாக இத்தேர்தல் வழிகாட்டும் - மாம்பழம் ஐங்கரநேசன் உறுதிபடத் தெரிவிப்பு

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை யுத்தத்திற்குப் பின்னர் ஜனநாயக முறையில் முன்னெடுப்பதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தவறிவிட்டது. இனிமேலும் தமிழர் அரசியலுக்குத் தலைமை தாங்கமுடியாதவாறு அது காலாவதியாகிவருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிடத்துக்குத் தாங்கள்தான் மாற்று என்று கூறிக்கொள்ளும் வடக்கின் முன்னாள் அமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவின் அணியும் ஏமாற்றம் தருவதாக உள்ளது. அவர் உருவாக்கியுள்ள அணி இந்தத் தேர்தலுக்கான கூட்டணி ஆகும். 

இந்நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தமிழத்தேசிய அரசியலை முன்னெடுக்கவல்ல கொள்கைப் பிடிப்புள்ள பலமான கூட்டுமுன்னணி ஒன்று உருவாகுவதற்கான வழியைக்காட்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கின் முன்னாள் விவசாய அமைச்சரும் பாராளுமன்ற வேட்பாளருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். 
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இந்நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை அணியாக மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றது. இதன் பரப்புரைக் கூட்டம் நேற்று இரவு ஞாயிற்றுக்கிழமை (02.08.2020) உடுப்பிட்டியில் நடைபெற்றபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு தமிழ்மக்களை வழிநடத்தவல்ல சரியான தலைமை இல்லாமற்போய்விட்டது. தமிழ்மக்கள் தங்கள் அரசியல் தலைமையாக நம்பியிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியின் ஏதேச்சாதிகார முடிவுகளால் தானாகவே அழிந்து வருகிறது. ஆனால் தங்களை அழிப்பதற்காகவே பல கட்சிகளும் சயேச்சைகளும் இத்தேர்தலில் போட்டி போடுவதாக அவர்கள் மேடைக்குமேடை பேசி வருகிறார்கள். 

கூட்டமைப்பின் மீது மக்கள் அவநம்பிக்கை கொண்டிருப்பதால் அவர்களுக்குக் கடந்த காலங்களில் கிடைத்த வாக்குகள் இந்தமுறை கிடைக்காது என்பது திண்னம். ஆனால், சிதறுகின்ற இந்த வாக்குகள் எவரை பலப்படுத்த கூடாது, எவரைப் பலப்படுத்த வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருத்தல் வேண்டும். சிங்களப்பேரினவாதக் கட்சிகளுக்கு வாக்களிப்பது இக் கட்சிகளின் ஆட்சி காலத்தில் நிகழ்ந்தேறிய  இனப்படுகொலையை சரி என்று நாங்கள் ஏற்றுக் கொண்டதாகிவிடும். 

தமிழ்மக்கள் தமிழ்த்தேசியக் கொள்கையை முன்னிறுத்தும் கட்சிகளில் இருந்து நேர்மையான, ஆளுமையான, கொள்கைப் பிடிப்புள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்ய வேண்டும். இந்தத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஏகபிரதிநிதித்துவத்தை மக்கள் வழங்கமாட்டார்கள். 

தமிழ்த்தேசியக் கட்சிகளில் வெற்றிப்பெறும் வேட்பாளர்கள் கட்சி வேறுபாடுகள் கடந்து ஒன்றாகத் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கவேண்டும். இதுவே பலமான ஒரு கூட்டு முன்னனி உருவாகுவதற்கான தொடக்கமாக அமையும். தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் இதற்கான பரிபூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தெரிவித்தார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post