தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் தமிழ் மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதாகவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்கினேஸ்வரன் அரசியல் மோசடி செய்வதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகைள நிராகரித்து மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளையே கூட்டமைப்பு முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக தமிழ் மக்கள் நிராகரித்து வருகின்ற ஒற்றையாட்சி அரசமைப்பை கூட தற்போது வேறு ஒரு பெயர் கூறி அதனை ஏற்க வைக்கின்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்துவதாக அமைகின்றது.
கூட்டமைப்பினரின் இவ்வாறான ஏமாற்று வித்தைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வருகின்ற ஒரே ஒரு தரப்பான எங்களது அணியை முடக்குகின்ற சதி வேலைகளையே கூட்டமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறான சதி நடவடிக்கைகளை எமது மக்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமானது.
குறிப்பாக கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனின் திருகோணமலை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் அங்கு நிலம் வளம் என அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டும் அபகரிக்கப்பட்டும் வருகின்றது. அதனைத் தடுத்து நிறுத்த முடியாதவர் தற்போது எங்கள் அணியில் தேர்தலில் நிற்கின்றவர்களை தங்களது பக்கம் இழுக்கின்ற நடவடிக்கைகளில் முன்னெடுத்து வருகின்றார்.
ஆக அங்கு பெரும்பான்மை சிங்கள தேசிய கட்சிகளில் பல தமிழர்கள் போட்டியிட்டாலும் அவர்களை தமது பக்கம் இழுப்பதை விடுத்து கொள்கையில் உறுதியாகவும் நேர்மையாகவும் பயணிக்கின்ற எங்களது உறுப்பினர்களை தமது பக்கம் இழுக்கின்ற வேலையை செய்திருக்கின்றார். ஆக அவரைப் பொறுத்தவரையில் இன்றைக்கு இருக்கிற ஒரே எதிரி நாங்கள் தான். ஆதனால் தான் எங்கள் அணியின் உறுப்பினர்களை தமது பக்கம் இழுக்கின்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்.
தமிழ் மக்கள் நம்பி வாக்களித்த போது அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நடக்காமல் மக்களை ஏமாற்றி வந்த நிலையில் அந்த உண்மைகளை மக்கள் இன்று உணர்துள்ளதால் சதி வேலைகளை செய்கின்றார். ஆகவே இந்தச் சதிவலைகளையும் தாண்டி நாம் நேர்மையாகவும் உறுதியாகவும் பயணிப்போம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் துமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி அவர்களுக்கு நம்பிக்கைக் துரோகம் இழைத்து வருகின்றதாகவும் கூறினார்.
மேலும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்கினேஸ்வரன் அரசியல் மோசடி செய்வதாகவும் கூறினார். அதாவது எங்களுக்கு முதிர்ச்சியில்லை என்று அவர் கூறுகின்றார். ஆனால் இந்த சின்னப் பொடியள் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் சொன்னதைத் தான் அவர் தனது நிலைப்பாடாக கொண்டிருக்கின்றார். அதே நேரத்தில் அவர் வேறு சில நிலைப்பாடுகளையும் மாறி மாறி எடுத்து வருகின்றார்.
குறிப்பாக இடைக்கால அறிக்கை வந்த போது அதனை ஒற்றையாட்சி என்று நிராகரித்திருந்தார். ஆனால் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பின் போது அந்த அறிக்கையை நிராகரிக்க முடியாது என ஏற்றுக் கொண்டிருந்தார். அது மாத்திரமல்லாமல் தாம் தான் இன்றைக்கு மாற்று என்று ஒரு பக்கம் கூறிக் கொண்டு தேர்தலிற்குப் பின்னர் கூட்டமைப்புடன் சேர்ந்து பயணிக்கவுள்ளதாகவும் கூறியிருக்கின்றார்.
ஆக சம்மந்தன் அவர்கள் பொய்களைக் கூறி மக்களுக்கு ஏமாற்றி வருவது போன்றே விக்கினேஸ்வரன் அவர்களும் மாறி மாறி நிலைப்பாடுகளை எடுத்து கருத்துக்களைக் கூறி அரசியல் மோசடி செய்து வருகின்றார். ஆகவே இந்தத் தரப்புக்களினை மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டியது முக்கியமானது.
ஆகவே எமது மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகின்ற இந்தத் தேர்தலில் மோசடிகாரர்களையும் ஏமாற்றுக்காரர்களையும் சரியாக இணங்கண்டு கொள்கையில் உண்மையாகவும் நேர்மையாகவும் உறுதியாகவும் பயணிக்கின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் ஆதரவை வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
Post a Comment