தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணை ஒரு சிறந்த ஆரம்பமாகவே நாங்கள் பார்க்கின்றோம். அந்த ஆணையின் அடிப்படையில் நாம் தொடர்ந்தும் கொள்கையுடன் உறுதியாகப் பயணிப்போம் என யாழ் ஆயரிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஆயரை இன்று சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..
தேர்தலுக்கு முன்னரும் மதத் தலைவர்களைச்; சந்தித்துக் கலந்துரையாடியிருந்தோம். தேர்தலிற்குப் பிற்பாடு தேர்தலில் நாங்கள் கணிசமான ஒரு வெற்றியை அடைந்திருக்கின்ற சூழலிலே மீளவும் மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்று வருகின்றொம்.
அத்தோடு எமது மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பல பிரச்சனைகளுக்கும் முகங்கொடப்பதற்கு அவர்களது பங்களிப்பை நாங்கள் கேட்டிருக்கின்றோம். அதற்பமைய நல்லை ஆதீனமும் யாழ் ஆயரும் தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக கூறியிருக்கின்றார்கள்.
மேலும் இளந்தலைமையாக இருக்கின்ற எங்களுடைய அணி சுறுசுறுப்பாக செயற்பட வேண்டும். அந்த வகையில் மக்களிடமிருந்து எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள ஆணையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டுமென்ற கருத்தை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
எங்களைப் பொறுத்தவரையில் இது மிக முக்கியமான மிகச் சிறந்த ஆரம்பமாகத் தான் பார்க்கிறோம். அந்த வேகத்திலே முன்னுக்குச் செல்வதற்கும் எதிர்பார்க்கிறோம். ஆகவே எமது மக்களின் ஆணையை மதித்து மக்களின் பிரச்சனைகள் தேவைகளுக்கான தீர்வை நோக்கிய எமது பயணம் இன்னும் இன்னும் வேகமாக முன்னெடுக்கப்படும் என்றார்.
Post a Comment