தியாக தீபம் திலீபனின் நினைவு நாளுக்கான தடை விவகாரத்தில் ஜனாதிபதி நீதிமன்றத்தின் நடவடிக்கையில் தலையிட வேண்டிய அவசியமே இல்லை என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்றை எடுத்து பொலிஸ் திணைக்களத்திற்கு நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவை நீக்குமாறு கட்டளை ஒன்றை பிறப்பித்தால் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு சுமூகமான தீர்வினை காண முடியும் எனவும் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் ஜனாதிபதி நீதிமன்ற விடயங்களில் தலையிட முடியாது என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இந்த விடயத்தில் நீதிமன்றத்தில் தலையிட வேண்டிய தேவை எழுவதாக எனக்குத் தெரியவில்லை.ஏனெனில் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த நினைவேந்தலுக்கு தடை உத்தரவை போடவில்லை.
இலங்கை பொலிஸ் திணைக்களம் சமர்ப்பித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த தடை உத்தரவு கிடைத்துள்ளது.ஆகவே இலங்கை பொலிஸ் திணைக்களத்தினை பொறுத்தவரையில் அது ஜனாதிபதியின் நேரடி அதிகாரத்துக்கு உட்பட்ட தினைக்களம்.
ஜனாதிபதி அரசியல் ரீதியாக ஒரு தீர்மானத்தை எடுத்து பொலிஸ் திணைக்களத்திற்கு தடை உத்தரவினை நீதிமன்றத்தின் ஊடாக எடுக்குமாறு வழங்கிய அறிவுரைக்கு அமையவே இவ்வாறான தடை உத்தரவு தற்போது பெறப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அரசியல் ரீதியான தீர்மானத்திற்கு அமையவும் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே நீதிமன்றத்தின் ஊடாக பொலிஸார் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்திற்கு இவ்வாறான தடை உத்தரவை எடுத்துள்ளனர்.
எனவே ஜனாதிபதி நீதிமன்ற விடயங்களில் தலையிட வேண்டிய தேவையே இந்த விடயத்தில் எழவில்லை.மாறாக ஜனாதிபதி அரசியல் ரீதியான தீர்மானத்தை எடுத்து அதனை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கி தடையை நீதிமன்றத்தின் ஊடாக நீக்குமாறு ஒரு கட்டளையை வழங்குவார் ஆனால் இந்த பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வினை காணமுடியும் என்றார்.
--
Post a Comment