வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம்.
இவ்வாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளது.
இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தின் நிறைவில் இன்று மாலை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கையில் தமிழர் தேசத்தின் தமிழின விடுதலை வரலாறு 70 ஆண்டுகளுக்கும் மேலானது. பல இலட்சம் தமிழ் மக்கள் இனக்கலவரங்களினாலும், போரிலும், போர்க்காலத்திலும், போராட்டங்களிலும் தம் உயிநீத்துள்ளனர். இன்னும் நாம் விடுதலை பெறவில்லை.
இவ் வரலாற்றுக் காலத்திலும் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்தும் ஈமக்கடனியற்றியும் கண்ணீர்விட்டழுதும் ஆறுதல் பெறுவது தமிழ் உறவுகள், தமிழ் மக்களின் பாரம்பரியம் இவை தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகமாகும்.
உலகில் இத்தகைய மனிதாபிமானக் கடமைகள் உயிரிழந்தவர்களை நினைவு கூரும்; கடப்பாடுகள் மனித குலத்தினாலும் ஐ.நா.சாசனத்தினாலும் உடன்படிக்கைகளினாலும் அங்கீகரிக்கப்பட்ட கடப்பாடாகும்.
உலகம் முழுவதும் இக்கடப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் இலங்கையில் இறந்தவர்கள் நினைவு கூரும் கடப்பாடுகள் அரசுகளினால் மறுக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் வரும் நிலமை தான் இருக்கின்றது.
மனித குலம், தமிழ் உறவுகள் தம் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்டழுது சாந்தி பெறும் இயல் உணர்வுகளைக் கூட, மனிதாபிமானக் கடமைகளைக் கூட இன்றைய கோத்தபாய அரசு மறுத்து வருகிறது.
இன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நீதிமன்றங்களில் எல்லாம் உறவுகளை நினைவு கூருவோருக்கு எமக்கும் பெயரிட்டு எதிராக முறையற்ற வழக்குகளைப் பதிவு செய்து தடையுத்தரவுகளை காவல்துறையினர் வழங்குகின்றனர்.
வடக்கு கிழக்கு முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளின் தலைவர்கள், வழக்கறிஞர்களுட்பட நூற்றுக்கணக்கானவர்கள் தடையுத்தரவின் பேரில் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு வருகின்றனர். அரசின், இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயக அடிப்படையுரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்கும்,மனிதாபிமான கடமைகளுக்கும் ஒட்டுமொத்தமாக ஐ.நா. சாசன உடன்படிக்கைகளுக்கும் எதிரானதாகும்.
இதனை நாம் எதிர்க்க வேண்டும். எதிர்த்துப் போராட வேண்டும். மனிதகுலத்திற்குரித்தான, தமிழ் மக்;களுக்குரித்தான ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க நாம் ஒன்று திரண்டு ஜனநாயக வழிகளில் போராட வேண்டும்.
இந்நிலமைகள் தான் 1987 செப்டம்பரில் காந்திய வழியில் உண்ணா நோன்பிருந்து 26ஆம் திகதி உயிரிழந்த திலீபனை நினைவு கூருவதிலும் இடம்பெற்றுள்ளது. அவன் தியாகம் மகத்தானது. 1987 செப்டம்பர் 26ல் உயிரிழந்த திலீபன் நினைவு கூருவதற்கு அப்பால் இலட்சக்கணக்கான உயிர்களை இழந்து அர்ப்பணித்த தமிழ் மக்களையும் நினைவு கூர நீதிமன்றத் தடைகளும் ஏற்படுத்தப்படுகின்றன. இதுவே தமிழின அழிவிலிருந்து எஞ்சியுள்ள எம் தமிழ்க் குலம் எதிர்காலத்திலும் எதிர்நோக்கியுள்ள பெரும் பிரச்சனையாகும். சவாலாகும்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இப்பொழுது 20ஆவது திருத்தச்சட்டவரைவை நாடாளுமன்றில் நிறைவேற்றும் தீவிரத்தில் உள்ளார். புதிய அரசியலமைப்பில் 20ஆம் திருத்தத்தை உட்படுத்த எண்ணுகிறார். 19ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகம் ஓரளவுக்கிருந்ததையும் அதனை நீக்கும் போது நாடாளுமன்ற ஜனநாயகம் பலவீனப்படுத்தப்படும் சர்வாதிகார பலத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் நாட்டில் இராணுவ மயமான பொலிஸ் அதிகாரமுமான ஆட்சி ஏற்படும்.
தமிழ்த் தேசத்து மக்களின் அரசியல் ஆளும் உரிமை, ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள், மனிதாபிமானக் கடமைகளை இத்தகைய அரசொன்றில் எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்கமுடியாது. பெரும் அடக்குமுறைக்கும் ஒடுக்கு முறைக்கும் தமிழ்த் தேச மக்கள் மூச்சு விடவோ கண்ணீர் விடுவதற்கக் கூட உரிமையற்றவர்களாகி விடுவோம். தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம், தமிழினம் அழிந்து விடும் அபாயத்தையே எடுத்துச் சொல்கிறோம்.
இந்த அபாயத்தை எதிர்கொண்டதால் தமிழ்த் தேசியத்தைக் கொண்டியங்கும் பத்து அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் கடந்த 18ஆம் திகதியன்று ஒன்று கூடி இழந்து போகும் ஜனநாயக அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்கும் படி ஒரு வேண்டுகோளில் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அனுப்பினோம். இதுவரை பதிலில்லை.
அரசின் பொலிஸார் வடக்குக் கிழக்கு முழுவதும் பல நீதிமன்றத் தடைகளையும், நடவடிக்கைகளையும் எடுத்த போது அவற்றைத் தாண்டி கடந்த 26ஆம் திகதி காலை 8.00 மணியளவில் உணவு தவிர்ப்புப் போரட்டத்தை எங்கே நடத்துவது என்பதைத் தீர்மானித்தோம்.
நேற்றுமுன்தினம் சாவகச்சேரியில் கைது செய்யப்படுவோம் என்ற நிலையிலும் முழுநாளும் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்தினோம். ஒற்றுமையினால் புதிய நம்பிக்கையைப் பெற்றோம். வெற்றியடைந்தோம். ஒரு குறுகிய இடைவேளையில் எல்லோரையும் அழைக்க முடியவில்லை.
இருப்பினும் அந்த உத்வேகத்தோடு அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும் ஜனநாயக அடிப்படை உரிமைகளை, மனித உரிமைகள் மற்றும் இறந்தோரை நினைவுகூரும் உரிமையை சட்ட உரித்தை நிலை நாட்டவும் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் இன்று முழுக்கடையடைப்பு ஒன்றை அறிவித்தோம். அதற்கு வடக்குக் கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் பெரும் வெற்றியடைந்துள்ளது.
பத்துத் தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த 19ஆம் திகதியன்று அரசிடம் எழுத்து மூலம் முன்வைத்த கோரிக்கைகளை, இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை ஏற்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம். இலங்கை ஜனநாயக சக்திகளிடமும் மக்களும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் எங்கள் வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.
ஒரு குறுகியகால ஒழுங்கில் இடம்பெற்ற உணவு தவிர்ப்புப் போராட்டத்தையும் முழுக் கடையடைப்பு நிகழ்வுகளையும் மக்களிடம், உலகம் முழுவதும் செய்திகளிலும், காணொளி மூலமும் கொண்டு சென்ற பத்திரிகையாளர்,ஊடகத்துறையினரு க்கு நிச்சயம் எங்கள் நன்றிகள் உண்டு.
இந்தப் போராட்டங்களின் வெற்றிக்காக உழைத்த, பங்களித்த அத்தனை அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், தொழிற்சங்க அமைப்புக்கள், பல நீதிமன்றங்களில் வழக்குகளே இடம்பெறாதளவுக்கு வழக்கறிஞர்கள் பங்களிக்கவில்லை, ஆசிரியர்கள் குறிப்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தீர்க்கமான அறிவிப்பு, மேலாக பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் அறிவிப்பும் பங்களிப்பும், பலதுறைகளின் கல்விச் சமூகம், இன்னும் தென்னிலங்கை ஜனநாயக முற்போக்குச் சக்திகள், முஸ்லீம்,மலையக அரசியல் தலைவர்கள், முஸ்லீம் வர்த்தக சமூகத்தினர், வேளாண் துறையினர், கடற்தொழில்துறையினர், போக்குவரத்துத் துறையினர், தனியார் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றியை சமர்ப்பித்து நிற்கின்றோம். இப் போராட்டங்களின் வெற்றி தமிழ் மக்களின் வெற்றியே. தமிழ் மக்கள் நிச்சயம் எழுச்சி கொள்வர் என நம்புகின்றோம்.
மாவை.சோ. சேனாதிராசா
தலைவர், இ.த.அ.கட்சி
பத்துத் தமிழ்க் கட்சிகளின் சார்பில்
Post a Comment