தியாகத்தின் பெயரால் ஏற்பட்ட ஒற்றுமை தொடர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் இளைஞரணிச் செயலாளரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் மறுக்கப்பட்ட உரிமைக்காக உருவாகிய உரிமைப் போராட்டம் ஆயுதப் போராட்ட வடிவமாக பரிணமித்த போது அர்ப்பணிப்பான உயிர்த் தியாகங்கள் அதனை வியந்து பார்க்க வைத்தது. இது முப்பதாண்டுப் போரில் நாம் கண்ட உண்மை.
தியாகங்கள் வீண் போகாது என எம் முன்னோர்கள் கூறுவார்கள் அதன் யதார்த்தம் போராட்டம் மௌனிக்கப்பட்டு 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் 2001 ஆம் ஆண்டை ஓரளவு நினைவு படுத்தியுள்ளது.
தமிழ்த் தேசிய சக்திகள் தங்களுக்குள் பிளவுகள் இருந்தாலும் இனத்தின் தேசிய விடையங்களில் தடைகள் எதிர்ப்புக்கள் வரும்போது ஓரணியில் நிற்போம் என்ற செய்தி தாயக புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கள தேசம் ஏற்றுக் கொள்கிறதா? ஏற்றுக் கொள்ளவில்லையா? என்பதற்கு அப்பால் தமிழர் தேசத்திற்கு ஒரு நல்லெண்ணத்தை தமிழ்த் தேசிய சக்திகள் இந்தக் காலத்தில் வெளிப்படுத்தியமை சிறப்பானது.
இருந்தாலும் இதனை ஒரு ஆரம்ப புள்ளியாக வைத்து அடுத்துவரும் நாட்களில் இனம் சார்ந்த பொதுக் கொள்கைகள் நிலைமாறு கால நீதி, இனப்படுகொலை போன்ற விடையங்களில் மிகவும் இராஐதந்திர பொறிமுறை அரசியலை கையாள இந்த ஒற்றுமை மேலும் சிறப்பாக அமைய வேண்டும்.
இதற்கு சொந்த நலன்களை ஒரு புறம் வைத்துவிட்டு கட்சி நலன்களுக்கு அப்பால் தேசிய பொதுக் கொள்கையில் இணைந்து செயற்படுவதே இன விடுதலைக்கு வழி சமைக்கும். இதற்காக இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என்றார்.
Post a Comment