முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களான, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களில், அக்காணிகளுக்குரிய விவசாயிகள் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காகச் செல்லும்போது அரச திணைக்களங்களால் தடுக்கப்படுதல் மற்றும், அங்குள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாயநிலங்கள் அபகரிக்கப்படுதல் போன்ற பிரச்சினைகளுக்கு விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புறு எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் மற்றும் கொக்குத்தொடுவாய் கமக்காரஅமைப்பின் தலைவர் கி.சிவகுரு ஆகியோர் அடங்கிய குழுவினர் வவுனியா மாவட்ட இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் 16.10.2020 இன்று எம்.ஏ.சுமந்திரன் அவர்களைச் சந்தித்து இக்காணிப் பிரச்சினைகள் தொடர்பில் முறையிட்டிருந்தனர்.
இந் நிலையில் இச் சந்திப்பின் பின் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளிலே வாழ்ந்த தமிழ் மக்கள், கடந்த 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து, பின்னர் 2012ஆம் ஆண்டு மீள் குடியேற்றப்பட்டிருந்தனர். அவர்களின் வயல் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் பேசியிருந்தோம்.
அந்தக் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தற்போது பயிர்ச்செய்கை மேற்கொள்ளமுடியாமல் தடுக்கப்படுவதும், சிலருடைய காணிகள் அபகரிக்கப்பட்டு வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற பிரச்சினை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் அப்பகுதி கமக்கார அமைப்பின் தலைவர் அடங்கிய குழுவினர் என்னைச் சந்தித்து முறையிட்டுள்ளனர்.
இப் பிரச்சினைதொடர்பில் வெவ்வேறு பிரிவுகளாக பார்வையிட்டு உரிய சட்டநடவடிக்கை எடுப்பதாக தீர்மானித்திருக்கின்றேன் என்றார்.
Post a Comment