'மாகந்துரே மதுஷ்' சுட்டுப் படுகொலை - அதிகாலையில் பயங்கரம் - Yarl Voice 'மாகந்துரே மதுஷ்' சுட்டுப் படுகொலை - அதிகாலையில் பயங்கரம் - Yarl Voice

'மாகந்துரே மதுஷ்' சுட்டுப் படுகொலை - அதிகாலையில் பயங்கரம்



பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த பிரபல பாதாள உலகக் கோஷ்டியின் முக்கிய புள்ளியான 'மாகந்துரே மதுஷ்' என அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்‌ஷித இன்று அதிகாலை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

மாளிகாவத்தை தொடர்மாடி வீட்டுத் திட்டப் பகுதியில் பொலிஸார் மற்றும் பாதாள உலகக் கோஷ்டியின் புள்ளிகளுக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு மோதலிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் பொலிஸார் இருவர்  காயமடைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார். 

குறிப்பிட்ட பகுதியில் பெருமளவு போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று கிடைத்த தகவலையடுத்துப் பொலிஸார் தமது பாதுகாப்பில் இருந்த மதுஷை அழைத்துக்கொண்டு அங்கு சென்றிருந்தார்கள். அப்போதே அங்கு நின்ற பாதாள உலகக் கோஷ்டியின் புள்ளிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றுள்ளது எனவும் அவர் கூறினார். 

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸாரால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது 22 கோடி ரூபா பெறுமதியான 22 கிலோ ஹெரோயின், 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் பாதாள உலகக் கோஷ்டியினருக்குச் சொந்தமான ஒரு மோட்டார் சைக்கிள் என்பன மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

தென் மாகாண முன்னாள் அமைச்சர் டேனி ஹித்தெட்டியவைப் படுகொலை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதுஷ், போதைப்பொருள் கடத்தல்களுடன் சம்பந்தப்பட்டிருந்தார்.  

இதனைத் தவிர, களுத்­துறை வடக்கு சிறைச்­சா­லை பஸ் மீது துப்பாக்கிப் பிர​யோகம் மேற்கொண்டு பாதாள உலகக் கோஷ்டியின் தலைவரான 'சமயங்' உள்­ளிட்ட 5 கைதி­களையும், இரண்டு சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­களையும் சுட்டுப் படுகொலை செய்த குற்றச்சாட்டும் மாகந்துரே மதுஷ் மீது சுமத்தப்பட்டுள்ள மற்றுமொரு குற்றச்சாட்டாகும்.
 
இவ்வாறான பின்புலத்தில் நாட்டிலிருந்து தப்பிச் சென்று டுபாயில் வாழ்ந்த மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 31 பேர், கடந்த வருடம் பெப்ரவரி 5ஆம் திகதி போதைப்பொருளுடன் ஹோட்டல் ஒன்றில் வைத்துக் கைதுசெய்யப்பட்டனர்.

டுபாயிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற மாகந்துரே மதுஷின் பிள்ளையின் பிறந்தநாள் விழாவின்போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 

கடந்த நல்லாட்சி அரசின் வேண்டுகோளுக்கிணங்க மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 31 பேரையும் டுபாய் அரசு நாடு கடத்தியிருந்தது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post