தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலைக்கு நோயாளர் நலன்புரிச் சங்கத்தால் தளவாடங்கள் நேற்று அன்பளிப்புச் செய்யப்பட்டன.
தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலைக்கு புதிய வைத்திய உத்தியோகத்தர்கள் வெளிமாவட்டத்திலிருந்து கடமைக்காக வரவிருக்கின்றார்கள். அவர்களுக்குரிய விடுதி வசதிகள் இன்மையால், அதற்கான ஏற்பாட்டை உடனடியாக மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் உதவியைக் கோரியிருந்தார்.
நோயாளர் நலன்புரிச் சங்கம் அந்த வேலைகளைப் பொறுப்பெடுத்து 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை செலவு செய்து பழைய தாதியர் விடுதியைத் திருத்தி வைத்தியர்களுக்கான விடுதியாக உருவாக்கியது. பின்னர் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தால் அந்த நிதி நோயாளர் நலன்புரிச் சங்கத்துக்கு மீளளிக்கப்பட்டமையுடன், விடுதிக்கான கட்டில்கள், அலுமாரிகள் என்பனவற்றையும் சுகாதாரத் திணைக்களம் வழங்கியிருந்தது.
விடுதியில் தங்குகின்ற வைத்தியர்களின் தேவைக்காக 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபா செலவில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம் 2 குளிர்சாதனப் பெட்டிகள், சோபா செற்றிகள், தொலைக்காட்சி மேசை என்பனவற்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இந்தப் பொருள்களை நேற்று தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலை வைத்தியர்கள் விடுதியில் வைத்து நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளரும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினருமான லயன் சி.ஹரிகரன், சங்கத்தின் பொருளாளரும் முகாமைத்துவ உத்தியோகத்தருமான செல்வி குலேந்திரன் திவ்யானி, சங்கத்தின் நிர்வாக உறுப்பினரும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினருமான லயன் பா.மரியதாஸ் ஆகியோர் இணைந்து வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆர்.டி.ஜி.விமலசேனவிடம் வழங்கிவைத்தனர்.
Post a Comment