தமிழர் தேசத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் - பாராளுமன்றில் கஜேந்திரகுமார் - Yarl Voice தமிழர் தேசத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் - பாராளுமன்றில் கஜேந்திரகுமார் - Yarl Voice

தமிழர் தேசத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் - பாராளுமன்றில் கஜேந்திரகுமார்



தமிழர் தேசத்தை அங்கிகரித்து அதனடிப்படையில் தமிழர்களுக்கு தீர்வை பெற்று கொடுப்பது இந்தியாவின் பொறுப்பு என நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

உரையின் முழுவடிவம் வருமாறு :

இந்திய – இலங்கை ஒப்பந்தமானது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான உடன்படிக்கையாகக் கருதப்படுகிறது. இந்த உடன்படிக்கையானது இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. 

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதே இவ்வுடன்படிக்கையின் முக்கிய குறிக்கோளாக அமைந்திருந்தது. இவ்வுடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்களை நீங்கள் அவதானித்தால், தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காணுதல் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் பற்றியே அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவ்வுடன்படிக்கையில் முக்கிய குறைபாடு என்னவெனில் இதில் ஒரு தரப்பாக தமிழ்மக்கள் இணைக்கப்படவில்லை. ஆதலால் தமிழ் மக்களின் சார்பில் இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இந்தியாவிற்கு, இவ்வுடன்படிக்கையினை முழுமையாக அமுலாக்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்கான மேலதிகமான ஒரு கடப்பாடு உள்ளது. ஆனால் கெடுவாய்ப்பாக, உண்மை நிலவரம் வேறுபட்டுக் காணப்படுகிறது. 

இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்துவதற்காக, இலங்கை அரசாங்கமானது அரசியலமைப்பின் பதின்மூன்றாம் திருத்தத்தினையும், மாகாணசபைகள் சட்டத்தின் மூலத்தினையும் நிறைவேற்றியது.

இச்சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்தபோது, அப்போதிருந்த முதன்மையான தமிழ்க் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி அப்போதைய பிரதமர் இராஜிவ் காந்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. 1987ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி அனுப்பப்பட்ட இக்கடித்தில் திரு. சிவசிதம்பரம், திரு. அமிர்தலிங்கம் ஆகியோருடன் இச்சபையில் அங்கம் வகிக்கும் திரு. சம்பந்தனும் கையொப்பமிட்டிருந்தார். அந்தக் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.  

இந்திய நிபுணர்களின் பங்குபற்றுதலின்றி இச் சட்டமூலம் வரையப்பட்டுள்ளதனால், இதனைப் பகிரங்கப்படுத்துவதற்கு முன்னர் இவ்வரைபினை இந்திய அரசாங்கத்திற்கு வழங்கி, அதன் கருத்தறியும் வகையில் கால அவகாசம் வழஙக்ப்பட வேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணி வலியுறுத்துகிறது. 

இவ்வாறு நடைபெறவில்லை என நாம் கருதுவதனால் செப்ரெம்பர் 29ம்திகதி ஜனாதிபதி ஜயவர்தனவை நாம் சந்தித்து அவரிடம் முறைப்படி கோரியிருந்தோம்.

 இந்தியாவிற்கு தெரியப்படுத்தாமலே இச்சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளமையிட்டு நாம் கவலையடைகிறோம். இது இந்தியாவை ஒரு தரப்பாக மதிக்காமல் நடத்துவதாகவும், இவ்வொப்பந்தத்தில் உள்ள பந்தி 2.15ஐ மீறுவதாகவும் அமைந்துள்ளது.

 அக்கடிதத்தின் முடிவில், இக்காரணங்களுக்காக மேற்படி சட்டமூலங்களை இப்போதுள்ள வடிவத்தில், தமிழ்மக்கள் திருப்தியடையும் வகையில் இவ்விடயங்களுக்கு தீர்வு காணப்படாமல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டாம் என ஜனாதிபதி ஜயவர்தனவை வற்புறுத்துமாறு தயவாகக் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டப்பட்டிருந்தது. 

ஆகவே இந்திய இலங்கை உடன்படிக்கைக்கும் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்திற்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது. எங்களது கட்சி பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தினை நிராகரிக்கிறது. தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்கு தீர்வுகாணும் விடயத்தில் இது ஒரு ஆரம்பப்புள்ளியாக அமையவில்லை என்ற காரணத்தினாலேயே நாம் பதின்மூன்றாம் திருத்தச்சட்டமூலத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை. 

தமிழ்மக்கள் பதின்மூன்றாம் திருத்தச்சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனைக் காரணங்காட்டி இவ்வொப்பந்ததினை கிழித்தெறிவதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாக ஆளும்தரப்பினர்,
ஐனாதிபதியும், பிரதமரும் நினைக்கலாம். ஆனால் அது ஒருபோது நடக்கப் போவதில்லை. 

ஏனெனில் இவ்வுடன்படிக்கையும் பதின்மூன்றாம் திருத்தச் சட்டமும் முற்றிலும் வேறுவேறானவை. அப்போதிருந்த அரசாங்கம் இவ்வுடன்படிக்கையை எவ்வாறு வியாக்கியானப்படுத்த விரும்பியதோ அதுவே பதின்மூன்றாம் திருத்தச்சட்டமூலமாகக் கொண்டுவரப்பட்டது.

ஆகவே, பதின்மூன்றாம் திருத்தச் சட்டமூலத்தை தமிழ்தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்விற்கான தொடக்கப்புள்ளியாகவேனும் நாங்கள் ஏற்றுக்கொள்ளாவிடினும், நாங்கள் அச்சட்டமூலத்தை நிராகரிக்கிறோமே தவிர இலங்கை – இந்திய உடன்படிக்கையை நிராகரிக்கவில்லை. 

மாறாக இவ்வுடன்படிக்கையின் சரத்துக்களின் படி தமிழர் தேசத்தினை அங்கீகரித்து, அவ்வுடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றி அதனடிப்படையில் இத்தீவில் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வினை எட்டுவதற்கு இந்தியா பொறுப்புக்கூறும் கடப்பாடு உடையது என்பதை வலியுறுத்துகிறோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post