இலங்கை அரசின் வெளிநாட்டுக் கொள்கையின் இடைவெளியை தமிழ் தலைமைகள் சரியாக கையாளுமா? கேள்வி எழுப்புகிறார் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்
இலங்கையில் தற்போதைய அரசாங்கம் வெளியுறவுக் கொள்கையில் தங்களுக்கு கடந்தகாலத்தில் ஏற்பட்ட ஜெனிவா பிரச்சினையை முறியடிக்கும் நோக்கில் நகர்வுகளை முன் நகர்த்தி வருகின்றது இதன் அடிப்படையில் சீன சார்புக் கொள்கையை கூர்மைப்படுத்தியுள்ளது.
இதனால் அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய நாடுகளின் கழுகுப் பார்வைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் வெளியுறவு நடவடிக்கையில் ஒரு இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனை தமிழர்களுக்கு சாதகமாக பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் மீள தமிழர் தலைமைகளுக்கு கிடைத்துள்ளது.
இதனை எவ்வாறு இராஜதந்திரமாக கையாளப் போகிறார்கள் என்பது பலர் மத்தியில் எழுந்துள்ள வினா!
உண்மையில் கடந்தகால அரசியல் நகர்வுகளை சரியாக அவதானிக்கும் போது உள் நாட்டில் தமிழர்களுக்கு இறுக்க நிலைமை உருவாகும் போது சர்வதேசத்தில் சாதகமான ஏதுக்கள் வெளிவந்தன. ஆனால் அதனை தமிழர் தரப்பு பல தடவைகள் சரியாக கையாள தவறிவிட்டனர்.
அதே வேளை பயன்படுத்திய சந்தர்ப்பங்கள் சில உண்டு. அச் செயற்பாடுகள் தொடர முடியாத துர்ப்பாக்கிய நிலைமைகள் ஏற்பட்டமையும் வரலாறு.
உதாரணமாக 1983 ஏற்பட்ட யூலைக் இனக் கலவரத்தை தடுத்து இந்தியாவின் கண்டனத்திற்கும் தலையீட்டிற்கும் இலங்கை ஐே ஆர் அரசு உள்ளாவதற்கு அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி இராஜதந்திரத்தை கையாண்டது.
இலங்கைத் தீவில் கடந்தகாலங்களை விட தமிழ்த் தேசிய இனத்தின் வாக்குப் பலம் இல்லாது தனிச் சிங்கள பெரும்பான்மைப் பலத்துடன் வந்துள்ள அரசாங்கம் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு ஒரு இறுக்கமான நெருக்கடியான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதற்கான ஏது நிலை உள் நாட்டில் தொடர்ந்து காணப்படும் போது தமிழத் தலைமைகள் வெளிச் சக்திகளின் அழுத்தங்கள் மூலமே பிரதான இலக்கை நகர்த்த முடியும். அதற்கான சாதக சூழல் தற்போது வெளி நாட்டு இராஜதந்திர நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ளது.
தமிழ்த் தலைமைகள் ஆளுக்கு ஒருவர் ஒவ்வொரு கருத்துக்களை முன்வைப்பதை தவிர்த்து கூட்டாக இரகசியமாக சாணக்கியமாக செயற்படுத்த தயாராக வேண்டும்.
வெறுமனே இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி பத்திரிகைக்கு போடுதல், ஊடகங்களில் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் உரையாடிய விடயங்களை விபரித்தல், தனி நபர்களாக வெளிநாட்டு முக்கியஸ்தர்களை சந்தித்தல் இவை எல்லாம் அரசாங்கத்தை பலப்படுத்தும் செயற்பாடாகவே அமையும். இதனை தவிர்த்து தந்திரோபாயமாக காய்களை நகர்த்துவதே காலத்தின் கட்டாயம் இதுவே இனத்தின் எதிர்காலத்திற்கும் ஆரோக்கியமாக அமையும் என்றார்.
Post a Comment