கிளிநொச்சி மாவட்ட மக்கள் சுகாதார திணைக்களத்தினரால் வழங்கப்பட்ட சுகாதார நெறிமுறைகளை மிக இறுக்கமாக கையாள வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் தற்போது கோவிட் 19 இரண்டாம் அலையானது மிக விரைவாக பரவி வருகின்ற நிலையில் சுகாதார திணைக்களத்தினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களை கிரமமாக பின்பற்ற வேண்டும்.
நாட்டின் பல பிரதேசங்கள் முடக்கப்பட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் கொரோனா நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் வழமையான சுகாதார சேவைகள் குறைக்கப்பட்டு அவசர சிகிச்சை சேவைகள் மாத்திரமே வழங்கக்கூடிய நிலை ஏற்படலாம்.
சுகாதார நெறிமுறைகளை பின்பற்றாமை, கொரோனா நோய்த்தாக்கத்தை பாரதூரமடைய செய்வதுடன் ஏனைய நோய்நிலைகளுக்கான சுகாதார சேவைகளையும் மட்டுப்படுத்துவதால் மக்களும் நோயாளர்களும் கடும் அசெளகரியங்களுக்கு உள்ளாக நேரிடுகின்றது.
கொவிட் 19 ஆரம்பித்த காலத்தில் மக்கள் சுகாதார நடைமுறைகளை சிறப்பாக பின்பற்றியிருந்தார்கள். அதன் பலனாக கொரோனா தொற்று கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்ததுடன், மட்டுப்படுத்தப்படாத விரிவான சுகாதார சேவையினை கிளிநொச்சி வைத்தியசாலையில் பெற்றிருந்தனர்.
இந்நிலை தொடரவேண்டுமாயின், சுகாதார நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றை மக்கள் தமது நாளாந்த கடமைகளில் ஒன்றாக பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மக்கள், பொது போக்குவரத்து, கூட்டங்கள், குடும்ப நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல்களை தவிர்த்து தேவையற்ற வெளியிட பிரயாணங்களையும் தவிர்த்தல் வேண்டும்.
மேலும், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நோயாளர்கள் மாத்திரம் வருகை தரவேண்டும்.
இயலாதவர்கள் யாரும் வருகைதரும் போது மாத்திரம் அவருக்கு துணையாக ஒருவர் வருகைதர முடியும். தற்போதைய கொரோனா தொற்றுநிலையினை கருத்தில் கொண்டு பார்வையாளர்கள் மற்றும் உறவினர்களின் வருகை கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கிளினிக் நோயாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட திகதி மற்றும் குறிப்பிட்ட சரியான நேரத்திற்கு மாத்திரமே கிளினிக் சிகிச்சை நிலையத்திற்கு வரவேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் சுகாதாரத்துறையினருடன் இணைந்து செயலாற்றுவதன் மூலமே தடையற்ற சுகாதார சேவைகளை இடையறாது பெற்றுக்கொள்ளமுடியும் என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment