யாழ்ப்பாணம் வேலனை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு பகுதியில் பொது மக்களின் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் முயற்சி அரசியல் வாதிகளினதும் பொது மக்களினதும் எதிர்ப்புகளையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மண்டைதீவு ஜே 7 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அதாவது மண்டைதீவுச் சந்தியில் கடற்படை முகாம் அமைந்துள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணியை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினால் அளவீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த்து.
இதனையடுத்து காணி உரிமையாளர் மற்றும் அப்பகுதி மக்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஒன்று திரண்டு காணி அளவீடு செய்யும் இடத்திற்கு முன்பாக எதிர்ப்பு வெளிப்படுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் காணி அளவீடு செய்யும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரான விந்தன் கனகரத்தினம் உட்பட வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்களான கருணாகரன் நாவலன், சிறிபத்மராசா, என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment