அரசினால் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் அதில் பிரதேச இளைஞர்களை ஆர்வம் காட்ட வேண்டும். இது பொருளாதார முன்னேற்றத்திற்கும் எமது நிலங்களை பாதுகாப்பதற்கும் அவசியமானது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை கிராமங்கள் தோறும் காணி பெறுதலுக்காக இளைஞர்களை விண்ணப்பிக்கக் கோரி ஒலிபெருக்கிப் பிரச்சாரத்தினை மேற்கொள்கின்றது. இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் எல்லைக்குள் அரசின் காணி பகிர்ந்தளிப்புச் செயற்றிட்டம் தொடர்பில் மேலும் விழிப்புணர்வினை ஏற்படுத்துமுகமாக எமது சபை ஒலி பெருக்கிகள் வாயிலாக பிரச்சாரப்படுத்தி வருகின்றது. காணிப்பகிர்வு விடயம் என்பது பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விடயமாக இருந்தபோதும் எமது பிரதேச வறுமை ஒழிப்பு சார்ந்த விடயத்தில் எமது இளைஞர்கள் உற்பத்தி முயற்சிகளில் ஆர்வம் காட்ட ஊக்குவிக்க பிரதேச சபை கடமைப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினை விடயத்தில் கூட நிலப்பகிர்வு என்பது ஆக்கிரமிப்புக்களுடன் கூடியதாக இருக்கின்றது. இந்த இடத்தில் எமது இளைஞர்கள் அதிகமாக விண்ணப்பிப்பது காணிகள் ஆக்கிரமிக்கப்படாது தவிர்ப்பதற்கான உத்தியாவும் அமையும்;. எமது பிரதேச சபை கடந்த அவைக்கூட்டத்தில் இது பற்றி கவனம் செலுத்தியிருந்தது. எமது பிரதேச இளைஞர்களுக்கே எமது பகுதிகளில் முக்கியத்துவம் கொடுத்து காணிகள் பகிரப்படவேண்டும் என கோரியிருந்தது.
அடிப்படையில் உலகளவில் ஏற்பட்டுள்ள தொற்று நெருக்கடிகள் உணவுப்பாதுகாப்புத் தொடர்பில் சிந்திக்கத்தூண்டியுள்ளது. உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்கு எமது நிலங்கள் உச்சமாகப் பயன்படுத்தப்படவேண்டும். எமது பிரதேசத்தில் பகிர்ந்தளிக்கக் கூடிய அரச நிலங்களுக்கு பற்றாக்குறை நிலவியபோதும் நிலம் காணப்படும் பகுதிகளில் நிலங்களைப் பெற்றுக்கொண்டு முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு இளைஞர்கள் தயாராக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும்.
எமது நிலங்களுக்கான விண்ணப்பங்களை நாம் போதுமானதாக சமர்ப்பிக்காவிட்டால் அது வடக்குக் கிழக்கிற்குள் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களுக்கும் அடிப்படையாக அமைந்து விடும். இவ் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கும் அதேவேளை எமது பொருளாதார நலன்களை நிலைநிறுத்துவதற்கும் சகலரும் முன்வந்து வலுவுள்ள ஆற்றலுள்ள அனைவரும் காணிகளைப் பெறுவதற்கு முயற்சிக்கவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
(விண்ணப்பப்பப் படிவங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)
Post a Comment