கொரோனா தொற்று காரணமாக கிராமங்களை முடக்கும்போது அல்லது முடக்கம் தொடர்பான அறிவித்தல்களை விடுக்கும்போது அப்பிரதேச மக்களின் வாழ்வாதாரங்களை கருத்தில் கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, நெல்லியடி - இராஜகிராமம் முடக்கம் தொடர்பான செய்திகளால் அப்பிரதேச மக்கள் தமது அன்றாட தொழில் வாய்ப்பை இழந்துள்ளமையை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேற்படி இராஜகிராமத்தை சேர்ந்த மக்களில் அதிகமானோர் கூலி வேலை செய்பவர்கள். சாரதிகள், நடத்துநர்கள், பொதிகளை ஏற்றி இறக்குபவர்கள் போன்று தினக்கூலி வேலை செய்து தமது வாழ்வாதாரத்தை கொண்டுசெல்கின்றனர். பலர் வியாபார நிலையங்களில் வேலை செய்கின்றனர்.
அவர்களில் பிரதேசம் கொரோனா காரணமாக முடக்கப்பட்டுவிட்டதாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் உண்மைக்கு புறம்பாக செய்திகள் வெளியிடப்பட்டதால் அவர்கள் தமது தொழிலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களை பணிக்கு அமர்த்துபவர்கள் கொரோனா அச்சம் காரணமாக வேலை வழங்க பின்னடிக்கின்றனர்.
ஆனால், இராஜகிராமம் முழுமையாக முடக்கப்படவில்லை எனவும் அங்குள்ள சில வீடுகள் மாத்திரமே முடக்கப்பட்டதாகவும் இந்த விடயத்தை ஊடகங்களும் முகநூல் போராளிகளும் ஊதிப் பெருப்பித்த காரணத்தால் அப்பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றனர்.
தற்போது கொரோனா உச்சம் பெற்றுள்ள நிலையிலும் நாட்டை முற்றாக முடக்கமாட்டார் என ஜனாதிபதி தெரிவித்திருக்கும் நிலையில் குறிப்பிட்ட வீடுகள், நிலையங்கள், குறிச்சிகள் மாத்திரமே முடக்கப்படவுள்ளன.
எனவே, முடக்கப்படும் இடம் அல்லது நிலையங்கள், வீடுகள் தொட்பாக உண்மையான தகவல்களை, அதுவும் அப்பிரதேச மக்களை பாதிக்காத வகையில் வெளியிடுமாறு அதிகாரிகளிடமும் ஊடகவியலாளர்களிடமும் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment