யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் வெளிவாரிப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் போது, பல்கலைக் கழக சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை முன்மொழிவதைத் தவிர்க்க வேண்டும் என்று துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா ஆலோசனை வழங்கியுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மூதவைக் கூட்டம் கடந்த வாரம் இடம்பெற்றது. இதன் போது, பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் வணிகமாணி (வெளிவாரி) பரீட்சைக்காக கற்கை நெறி இணைப்பாளரால் முன்மொழியப்பட்டு, முகாமைத்துவ குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட விடைத்தாள் மதிப்பீட்டாளர்களின் பட்டியல் பணிப்பாளரால் மூதவை அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த போதே துணைவேந்தர் மேற்குறிப்பிட்டவாறு ஆலோசனை வழங்கினார்.
இதுபற்றித் துணைவேந்தர் மேலும் குறிப்பிடுகையில், ஓய்வு பெற்றுச் செல்பவர்களை அவர்களது ஓய்வுக் காலத்தை அனுபவிப்பதற்கு விட வேண்டும். அவர்களைத் தேவையான இடங்களில் ஆலோசகர்களாகக் கொண்டு, அவர்களுக்குக் கௌரவத்தை கொடுக்க வேண்டும்.
தேவையான திறமையும், தகுதியும் உள்ளவர்கள் தற்போது சேவையில் இருக்கிறார்கள். அவர்களை மதிப்பீட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்துங்கள் என்றும், இதன் மூலம் முடிவுகளை வெளியிடுவதில் தேவையற்ற தாதமங்களைத் தவிர்க்க முடியம் என்றும் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்திஅன்ன பணிப்பாளருக்குத் துணைவேந்தர் ஆலோசனை வழங்கினார்
Post a Comment