"தற்பாதுகாப்புடன் முன்னெச்சரிக்கை யாக இருந்தும் கூட வைரஸ் எனக்குத் தொற்றியிருப்பது நிச்சயமாக அது அனைவருக்கும் தொற்றும் என்பதையே காட்டுகிறது. மிகக் கவனமாக இருங்கள்.”
இவ்வாறு தனது ருவீற்றர் வீடியோ பதிவில் தோன்றி நாட்டு மக்களை எச்சரித்திருக்கிறார் அதிபர் மக்ரோன்.
வைரஸ் தொற்றுக்கு இலக்காகி ஒரு நாள் கடந்த நிலையில் மக்ரோன் லா லன்ரேன் (La Lanterne) வாசஸ்தலத்தில் தனிமையில் இருந்து வருகிறார். இன்று மாலை வெளியாகிய அவரது வீடியோ பதிவில்” “நான் நலமுடன் உள்ளேன்” என்ற செய்தியை அவர் நாட்டுக்குத் தெரிவித்திருக்கிறார்.
தனது தொற்றுக்கு “கவனமின்மை”, “துரதிர்ஷ்டம்” இரண்டையும் காரணமாகக் காட்டியிருக்கும் அவர், “விரைவில் திரும்பி வருவேன். இது ஒரு மோசமான கட்டத்துக்குச் செல்லும் என்று நம்புவதற்கு காரணங்கள் இல்லை” எனவும் நம்பிக்கைவெளியிட்டிருக்கிறார்.
நாட்டின் சுகாதார விடயங்களையும் ‘பிரெக்ஸிட்’ போன்ற வெளிவிவகாரங் களையும் தான் தொடர்ந்து கவனித்துக் கையாண்டு வருகிறார் என்பதையும் மக்ரோன் தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிடத்தக்க நோய்ப் பாதிப்பு எதுவும் அற்ற இளவயது, புகை மற்றும் தீவிர மதுப் பழக்கம் இன்மை, இவற்றை மக்ரோன் வைரஸின் பிடியில் இருந்து பாதிப்பின்றி இலகுவில் மீண்டு வருவதற்குச் சாதகமான நிலைமைகளாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இராணுவ மருத்துவ சேவையைச் சேர்ந்த கேணல் தர நிபுணரான ஜீன்கிறிஸ்தோப் பெரோஷோன் (Jean-Christophe Perrochon) என்பவரே பிரெஞ்சு அதிபருக்கான அவசர மருத்துவ சேவைக்குப் பொறுப்பாக இருந்து வருகிறார். அவரது தலைமையிலான மருத்துவர் குழுவே மக்ரோனுக்குத் தற்சமயம் சிகிச்சை அளித்து வருகிறது.
Post a Comment