நாட்டில் ஏற்பட்டுள்ள சூராவளியுடன் கூடிய மழை காரணமாக யாழ்.குடாநாட்டின் தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
அந்தவகையில்,யாழ்.தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் பல நீரில் மூழ்கியுள்ளன.
வெள்ளநீர் உட்புகுந்துள்ளதால் மட்டுவில்,கைதடி,நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்றிரவு வீசிய கடுங்காற்றுக் காரணமாக தென்மராட்சி மீசாலை வடக்கு பகுதியில் 300 ஆண்டு பழமையான பாலை மரம் அடியோடுபாறி ஆலயம் ஒன்றின் மீது வீழ்ந்துள்ளது.
மேலும், மீசாலை மேற்குப் பகுதியில் தென்னை மரம் ஒன்று மின்சார கம்பிகள் மீது வீழ்ந்ததால், மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
மேலும், கொடிகாமம் பிரதேசத்தில் வெள்ளத்தில் வீழ்ந்த 29 வயதுடைய இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சாவகச்சேரி மகிழங்கேணி பிரதேச குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்ததால் 61 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
அவர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியபோதும் அவர்கள் அங்கு செல்ல மறுப்புத் தெரிவித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
தங்களுக்கான நிரந்தர வீடுகளை அமைத்துத் தருமாறும் அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment