வடக்கிலுள்ள தொழிற்சாலைகளுக்கான பணிகளுக்கு தெற்கிலிருப்பவர்கள் இனிமேல் அமர்த்தப்பட மாட்டார்கள் என்று உறுதிபடத் தெரிவித்துள்ள கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இக்கட்டான எந்தச் சந்தர்ப்பத்திலும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான எம்மை விட்டு அமைச்சுப் பதவிகளுக்காக அடுத்த அரசாங்கங்களின் பக்கம் தாவிச்செல்லாத அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைகள் அனைத்தையும் இந்த அரசு அவரது மக்களுக்காக பெற்றுத்தர தயாரகவே இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் ஊர்காவற்றுறையில் அமைக்கப்பட்டுள்ள வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் மற்றும் கடற்கலங்கள் பரிசோதிக்கும் தளம் ஆகியவற்றை திறந்துவைத்தபின் உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில் -
இந்த நாட்டில் நடைபெற்றுவந்த கொடிய யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் நாட்டில் அனைத்து மக்களும் சம உரிமைகளுடன் அனைத்தையும் பெற்று வாழவேண்டும் என்ற நோக்குடன் அபிவிருத்தியை நோக்கிய தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதுபோல தெற்கிலுள்ள பிள்ளைகள் எத்தகைய வரப்பிரசாதங்களை எல்லாம் அனுபவிக்கின்றார்களோ வடக்கிலுள்ள பிள்ளைகளுக்கும் கிடைக்கவேண்டும் என்பதே எமது விருப்பமாகும். இது தொடர்பில் இந்த அரசில் இருக்கின்ற அனைத்து அமைச்சுகளுக்கும் அக்கறையும் இருக்கின்றது. அத்தகைய ஒரு செயற்பாடுதான் இன்று ஊர்காவற்றுறையில் அமைக்கப்பட்டுள்ள வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் மற்றும் கடற்கலங்கள் பரிசோதிக்கும் தளம் ஆகியனவாகும்.
மேலும் இவ்வாறான தொழில் பெறும் மையங்களை உருவாக்குவது இங்குள்ள மக்களின் தொழில் வாய்ப்புக்கான எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்வதற்கேயாகும். அத்துடன் இனிமேல் இங்குள்ள தொழிற்சாலைகளுக்கான தொழிலுக்கு தெற்கிலிருப்பவர்கள் அமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
அத்தோடு துறைமுக அதிகார சபை, துறைமுகம் சார்பான பயிற்சிகளை இங்குள்ள இளைஞர்களுக்கு வழங்க வேண்டும். அதனூடாக இங்குள்ள மக்களும் அத்துறையில் தொழில் பெறவேண்டும் என்பதே எமது அரசின் நோக்கமாகும்.
அத்துடன் இந்த இடத்தில் நான் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்பகிறேன். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது நீண்ட நாள் நண்பர். அவர் நல்ல இதயம் கொண்டவர். அவர் எப்போதும் தனது மக்களுக்காகவும் அந்த மக்களின் நலன்கருதியும் அரசுடன் இணைந்து பல திட்டங்களை வகுத்து பல்வேறு நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்ற ஒருவர்.
தற்போது ஒலுவில் துறைமுகத்தை புனரமைத்து பெற்றுத்தர கேரியிருக்கின்றார். அதேபோன்று இப்பிரதேசத்தின் உற்பத்திப் பொருட்களை பாதுகாப்பதற்கான வாகன வசதியை பெற்றுத்தருமாறும் கோரியுள்ளார். வடக்கிலுள்ள துறைமுகங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் எம்மிடம் வலியுறுத்தியும் வருகின்றார். அவரது கோரிக்கைகள் அனைத்தையும் நிச்சயம் எமது அமைச்சும் இந்த அரசும் செய்து கொடுக்க தயாராகவே இருக்கின்றன. அதற்கான நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
அதேவேளை அவர் இக்கட்டான எந்தச் சந்தர்ப்பத்திலும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான எம்மை விட்டு அமைச்சுப் பதவிகளுக்காக அடுத்த அரசாங்கங்களின் பக்கம் தாவிச்சென்றது கிடையாது.
அதேபோன்று ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் இணைந்து தமிழ் மக்களுக்காக மட்டுமல்லாது இந்நாட்டு மக்களுக்காக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். அவரிடம் பேதங்கள் கிடையாது. தேசிய நல்லிணக்கத்தை மிகவும் நேசிக்கும் அவர் அரசுடன் அன்னியோன்னியமாக ஒன்றித்து பணியாற்றுகின்றார்.
அந்தவகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக தமிழ் மக்களுக்கு இன்னும் பல அபிலாஷைகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்த அமைச்சர் நாம் அனைவரும் இன மத பேதங்கள் இன்றி இலங்கையர் என்ற எண்ணத்துடன் ஒற்றுமையாக பயணித்தால் எமது நாட்டை வலுவான தேசமாக கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment