யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமம் வெள்ளத்தில் மூழ்கி மக்கள்
நிர்க்கதி ஆகியுள்ள நிலையில், அந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைக்கும் பணியில் வெண்கரம் அமைப்பு
ஈடுபட்டுள்ளது.
வெண்கரம் செயற்பாட்டாளர் மு.கோமகன் தலைமையில் பல செற்பாட்டாளர் அங்கு நின்று இந்த மனிதநேயப் பணியில்
ஈடுபட்டுள்ளனர்.
யாழ். நகரின் சில இடங்களில் வீடற்ற நிலையில் உள்ள மக்களுக்கு யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்
ஒதுக்கப்பட்டு அரச உதவியுடன் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. எனினும், அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக
இக்கிராமம் முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இந்த மக்கள் தற்போது அப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கட்டிடத்தில் தற்காலிகமாக
தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொடுக்கும் பணியில்
வெண்கரம் அமைப்பு ஈடுபட்டுள்ளது. பொது அமைப்புக்கள் மற்றும் கொடையாளர்கள் இப்பணியில் இணைக்கப்பட்டு
வருகின்றனர்.
இன்றைய தினமும் இவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது. நாளை இவர்களுடன் சேர்ந்து பொம்மைவெளி மற்றும் அதனை அண்டிய
பிரதேசங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதி ஆகியுள்ள மக்களுக்கும் சமைத்த உணவு வழங்கும் செயற்பாடு
வெண்கரம் அமைப்பால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் சொந்த வீடுகளில் மீளக்குடியேறும் வரை அவர்களுக்கான உதவிகளை வழங்கவேண்டிய அவசிய தேவை ஏற்பட்டுள்ளமையால்
மனிதநேய அமைப்புக்கள் மற்றும் கொடையாளர்கள் இவர்களுக்கான உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment