வவுனியா மாவட்டத்தில் ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகத்தில் இன்று மதியம் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் nhடர்பில் பணிப்பாளர் மேலும் தெரிவித்ததாவது..
வவுனியா மாவட்டத்தின் பட்டானிச்சூர் புளியங்குளம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்தும் பலரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பலர் நகரத்துடன் தொடர்புபட்டதாக எமக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து நகரப் பகுதியில் 204 பேருக்கு பீசீஆர் மேற்கொள்ளப்பட்டு கொழும்பிலுள்ள ஆய்வுகூடமொன்றுக்கு பரிசோதனை முடிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதில் 54 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு குறித்த ஒரு இடத்தில் அதிகளவிலானோருக்கு ஒரே நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மிகத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம்.
மேலும் இந்தக் கொரோனா பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்காக அடுத்த கட்ட நடவடிக்கைகனை தொடர்ந்து முன்னெடுக்க இருப்பதாகவும்; அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment