நல்லூர்ப் பிரதேசசபையின் புதிய தவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன்
பங்காளிக் கட்சியான ரெலோவின் உறுப்பினர் கு. மதுசுதன் அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.
ஆனால், தவிசாளர் தா. தியாகமூர்த்தி அவர்கள் தங்களின் பங்காளிக்
கட்சியான தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தபோதும் அவரை வீழ்த்தித் தான் தவிசாளராக வேண்டும் என்ற நோக்கில் இவர் இரண்டு தடவையும் பாதீடைத் தோற்கடிப்பதற்குத் தீவிரமாகச் செயற்பட்டிருந்தார்.
எமது உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் பாதீடைத் தோற்கடித்துத் தனக்கு ஆதரவை வழங்குமாறு கேட்டிருந்த இவர் பாதீடின்போது அதற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தார்.
இதனாலேயே, அரசியல் அறத்தின்
பாற்பாட்டு இவருக்கு எம்மால் வாக்களிக்க முடியாமற் போனது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின்
தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
நல்லூர்ப் பிரதேசசபைத் தேர்தலில் புதிய தவிசாளர் தெரிவு அண்மையில் இடம்பெற்றது. இதுதொடர்பாகத்
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் நிலைப்பாடுபற்றி பொ. ஐங்கரநேசன் வெளியிட்டிருக்கும் ஊடக
அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும்,
ஜனநாயக ரீதியாகப் பதவியொன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராயினும் வலுவான காரணங்கள் எதுவும் இல்லாமல் அரசியல் காழ்ப்பின் காரணமாகக் கவிழ்க்கக்கூடாது என்பது தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் உறுதியான நிலைப்பாடு ஆகும்.
அதன் அடிப்படையில் ஏனைய
எதிர்க்கட்சிகள் யாவும் ஓரணியில் நிற்பதால் பாதீடு தோற்கும் என்று தெரிந்திருந்தும் பாதீடுக்கு
ஆதரவாகவே நல்லூர்ப் பிரதேசசபையில் உள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இரண்டு உறுப்பினர்களும்
இரண்டு தடவைகளும் வாக்களித்தார்கள்.
வடக்கு மாகாண சபையில் விவசாய அமைச்சர் பதவியை நான் துறந்தபோது இதற்கான நெருக்கடிச் சூழலை ஏற்படுத்திய தரப்பிலிருந்தே, கௌரவ முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் அவர்களைப் பதவி விலக்கக்கோரும்
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் என்னைக் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொண்டதோடு, என்னைப் பதவி
விலகவேண்டாம், அமைச்சராக நான் பதவியைத் தொடரலாம் என்றும் தெரியப்படுத்தியிருந்தார்கள்.
இந்த இழிசெயலை நான் செய்ய விரும்பாததோடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆதரவாகக் கையெழுத்தும் இட்டிருந்தேன். இந்தச் சம்பவத்தை கு. மதுசுதன் அவர்களை ஆதரிக்குமாறு என்னைக் கேட்ட தரப்பினர்களிடம் நான் சுட்டிக் காட்டியிருந்ததோடு, ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடமும் தமிழரசுக் கட்சியின்
சிரேஷ்ட துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்களிடமும் பொருத்தமான பிறிதொரு வேட்பாளரை
நிறுத்தினால் எமது ஆதரவை வழங்குவோம் என்றும் தெரியப்படுத்தியிருந்தோம்.
ஆனால், பாதீடைத் தோற்கடிப்பதற்கு ஒத்துழைத்ததைப்போல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ வேட்பாளரை மாற்றுவதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை.
நல்லூர்ப் பிரதேசசபைத் தேர்தல் 2018இல் நடைபெற்றபோது எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத
நிலையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, தமிழர் விடுதலைக்
கூட்டணியின் ஆதரவுடனேயே தமிழரசுக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.
இதன்போது, இந்த அணிக்கு எதிராக,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ. கஜேந்திரன் அவர்கள் கேட்டுக்கொண்டதன்
அடிப்படையிலும் எமது கட்சியின் கருத்தியலின் அடிப்படையிலும் வெற்றி, தோல்வி பற்றிச் சிந்திக்காது
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிறுத்திய வேட்பாளருக்கே ஆதரவு தெரிவித்திருந்தோம். ஆனால், ஜனநாயக ரீதியாகக் தா.தியாகமூர்த்தி அவர்கள் தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் அவருக்கு எமது உறுப்பினர்கள் பூரண ஒத்துழைப்பை எப்போதும் வழங்கி வந்துள்ளார்கள்.
இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாதீடைத் தோற்கடிப்பதற்குக் காரணமாக அமைந்தவரே வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான ப. மயூரன் அவர்களுக்கு அவர் வெல்லுவாரா தோற்பாரா என்ற கணிப்பீடு எதுவுமின்றி அறத்தின்பாற்பட்டு எமது உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள்.
புதிய தவிசாளராகப் பதவியேற்றுள்ள அவர் கட்சி முரண்பாடுகளைக் கடந்து சேவையாற்ற வேண்டும் எனவும் சபையின் உறுப்பினர்கள் மீளவும் ஒருதடவை பாதீடைத் தோற்கடிக்காது மக்கள் நலன் சார்ந்து ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
தனிப்பட்ட அரசியல் வாதிகளை விடக் கட்சிகளின் நலன் முக்கியமானது. கட்சிகளின் நலனைவிட மக்களின் நலன்
முதன்மையானது. இந்நலன்கள் யாவும் அரசியல் அறத்தின்பாற்பட்டதாக இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment