உணவு ஒறுப்பில் ஈடுபட்டிருக்கும் யாழ்ப்பாண பல்கலைக் கழக கலைப்பீட மாணவர்கள் மீது விதிக்கப்பட்டருந்த உள்நுழைவுத் தடை மனிதாபிமான அடிப்படையில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விலக்கிக் கொள்ளப்படுவதாகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா அறிவித்துள்ளார் என்று சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் கலாநிதி எஸ். ராஜ் உமேஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் உணவு ஒறுப்பில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காகவும், மாணவர் நலன் கருதியும் துணைவேந்தருக்குஅளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
துணைவேந்தரின் இந்த முடிவு பற்றி உடனடியாக உணவு ஒறுப்பில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் கலாநிதி எஸ். ராஜ் உமேஸ், மாணவர் நலச் சேவைகள் உதவிப் பதிவாளர் எஸ். ஐங்கரன், பல்கலைக் கழக சட்ட நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் எஸ். கண்ணதாசன் மற்றும் ஒழுக்காற்று அதிகாரி பி. ஹஜந்தன் ஆகியோர் நேரில் சென்று துணைவேந்தரின் முடிவை மாணவர்களுக்கு அறிவித்ததோடு, உணவு ஒறுப்பைக் கைவிடுமாறும் கேட்டுக் கொண்டார். இதன் போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்த முடிவை ஏற்றுக் கொள்வதற்கு மாணவர்கள் பின் நின்றனர். எனினும், துணைவேந்தரின் இந்த நடைமுறை முரண்பாடுகளுக்குத் தீர்வாக - சிறந்த திறவுகோலாக அமையும் என்றும், தொடர்ந்தும் பிரச்சனைகளை வளர்த்துக் கொள்ளாமல் நடைமுறைகளைப் பின்பற்ற மாணவர்கள் முன் வரவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment