யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் - Yarl Voice யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் - Yarl Voice

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்





யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒருக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உணவு ஒறுப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதனையடுத்து பல்கலைக்கழக வாயிலைச் சுற்றி படையினரும், பொலிசாரும் குவிக்கப்பட்டிருப்பதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

கடந்த வருடம் ஒக்டோபர் 08 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை முற்றி, கைகலப்பில் முடிந்திருந்தது.

அன்றைய தினம் இரவு வரை தொடர்ந்த முரண்பாடுகள், மூன்றாம் வருட மாணவர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையில் முரண் நிலையைத் தோற்றுவித்திருந்தன. இதனையடுத்து சுயாதீனவிசாரணை மேற்கொள்ளப்படும் என துணைவேந்தர் வாக்குறுதி அளித்த பின்னர் அனைத்து மாணவர்களும் கலைந்து சென்றிருந்தனர்.

அதன் பின், ஒக்டோபர் 9 ஆம் திகதி இடம்பெற்ற விசேட பேரவைக் கூட்டத்தில் வணிக முகாமைத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், ஓய்வு நிலைப் பேராசிரியருமான மா. நடராஜசுந்தரம் தனிநபர் விசாரணையாளராக நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

விசாரணை முடிவில் 130 பக்கங்களைக் கொண்ட விரிவான விசாரணை அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு, அந்த அறிக்கை பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று சபையில் ஆராயப்பட்டபின், பேரவைக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அதன் பின் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று சபைபரிந்துரைத்த தண்டனைகள் உறுதிப்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளியுடன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதே நேரம், பேரவையில் ஆராயப்பட்ட விடயங்களைப் பகிரங்கப்படுத்தயதன் மூலம் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மாணவர் தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.






0/Post a Comment/Comments

Previous Post Next Post