அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறைகளில் உள்ளோரின் உறவினர்களுக்கும் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையில் சந்திப்பு
அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு இலங்கையின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் உறவினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு இலங்கையின் சிறைகளில் உள்ள கைதிகளின் உறவினர்கள் அவர்கள் பிரதிநிதிகள் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை சந்திப்பதற்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவே இச்சந்திப்பு இடப்பெற்றதுடன், சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் பிரதிநிதிகள், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் திணைக்களத்தின் சட்டப்பிரிவின் பிரதானியும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோகண அவர்களும், சிறைக் கைதிகளின் உரிமைகள் தொடர்பான சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி சேனக உள்ளிட்டோரும் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுடன் இந்தக் கலந்துரையாடலில் இணைந்திருந்தனர்.
இலங்கையில் நீறுபூத்த நெருப்பாக எரிந்து கொண்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வொன்றினை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற அரசியலுக்கும் அப்பாற்பட்ட கரிசனையின் காரணமாகவே தாம் இந்த விடயம் தொடர்பில் முன்வந்ததாக கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் குறிப்பிட்டதுடன், இது தொடர்பில் கௌரவ நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களுடன் இன்று காலைகூட பாராளுமன்ற கேள்வி பதில் நேரத்தில் ஆராய்ந்ததாகவும் தெரிவித்தார். இதன்போது அமைச்சரும் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் உள்ளோரினை விடுவிப்பதற்கு கொள்கை ரீதியான தீர்மானமொன்றை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் சுட்டிக் காட்டினார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 236 பேர் இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் 107 பேர் விடுதலைப் புலிகள் என்ற சந்தேத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் தரப்பில் இதன் போது தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சிறைச்சாலைகளுக்குள் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கும் பொறுப்பு அமைச்சுக்கு உள்ளதென குறிப்பிட்ட பணிப்பாளர், உறவினர்கள் எவராவது பாதிப்பட்டிருந்தால் அதுதொடர்பான தகவல்களை வழங்கும்படியும் உறவினர்களிடம் கோரியிருந்தார்.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறுபவர்கள், வழக்குத் தாக்கல் மேற்கொண்டு நீதிமன்றங்களில் வழக்கு இடம்பெற்றுவரும் நிலையில் சிறைகளில் உள்ளோர் மற்றும் இதுவரையும் வழக்குத் தாக்கல் மேற்கொள்ளப்படாது சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரென மூன்று வகையாக இவர்களை வகைப்படுத்த முடியுமென இதன்போது குறிப்பிட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் திணைக்கள விசாரணைகள் தாமதமாகி ஏதேனும் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அதுதொடர்பான தகவலை தெரியப்படுத்தினால் அவற்றின் விசாரணைகளை விரைவில் முன்னெடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு வழிவகைகளை மேற்கொள்வதற்கு தாம் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் 88/89 காலப்பகுதிக்கு பின்னர் இவ்வாறானதொரு நிலையினை எதிர்நோக்கியிருந்ததுடன் அப்போதைய அரசாங்கம் பொதுவான கொள்கையொன்றின் அடிப்படையில் அவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்ததை சுட்டிக்காட்டிய சிறைக் கைதிகளின் உரிமைகள் தொடர்பான சங்கத்தின் தலைவர், அதேபோலொரு பொதுவான கொள்கை ரீதியான தீர்மானத்தை தற்போதை அரசாங்கம் எடுக்க வேண்டுமென்றும் அதற்கு கல்விமானான கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கையினை முன்வைக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
நீதி மன்ற வழக்கு நிறைவடைந்து தண்டனைகளுடன் சிறைகளில் உள்ளோர், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்போர் மற்றும் இன்னும் வழக்கோ குற்றச்சாட்டோ எதுவும் தாக்கல் செய்யப்படாது சந்தேகத்தின் அடிப்படையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரென வகைப்படுத்தி அவர்களின் விபரங்களை தனித்தனியாக கையாள்வதற்கும் இது தொடர்பில் அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவூட்டுவதற்கும் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுவதற்கும் எதிர்பார்ப்பதாகவும் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார், பதுளை ஹம்பாந்தோட்டை நீர்கொழும்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசியல் கைதிகளின் உறவினர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment