இந்தியாவின் அனுசரணையில்லாது ஈழத்தமிழர் பிரச்சனைக்கான தீர்வு இலங்கைத்தீவில் சாத்தியமில்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இ.கதிர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத்தொடர் ஆரம்பமாகி உள்ளது. இந்த நிலையில் கடந்த காலங்களில் ஐ.நாவினால் முன்வைக்கப்பட்ட சில விடயங்கள் தொடர்பாக தமிழ் மக்கள் ஒரு பெரிய எதிர்பார்ப்போடு இருக்கின்றார்கள்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவினுடைய போர்க்குற்ற நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்திற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையோடு எமது மக்கள் எதிர்பார்ப்போடு இருக்கின்றார்கள்.
ஆனால் அவ்வாறான சூழல் தற்போது அமையவில்லை ஐ.நாவினுடைய நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன முதலாவது வரைபிலேயே இலங்கைக்கு எதிரான சில விடயங்கள் குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால் தற்போதைய சூழ்நிலையில் எமது மக்களுடைய எதிர்பார்ப்பு என்பது இலங்கையை ஒரு குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று அங்கு சரியான முறையில் உண்மைகள் விசாரிக்கப்பட்டு எமது மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான்
எமது மக்களுடைய நிலைப்பாடு இந்த நிலையிலே ஐநாவினுடைய பொதுச்சபை ஒன்றுகூடி இருக்கின்ற இந்நாளிலே நாங்கள் இந்த கருத்தினை முன் வைக்கின்றோம். எதிர்காலத்தில் தொடர்ந்தும் இவ்வாறான ஒரு மந்தநிலை இருந்தால் இலங்கை அரசானது பயங்கரவாத செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்ய கூடிய நிலை காணப்படுகின்றது.
அந்த வகையில் பன்னாட்டு சமூகம் எமது மக்களுக்கான எமது மக்களுடைய நீதிக்காக செயற்பட வேண்டும் உண்மையிலேயே இதற்கு இந்தியாவினுடைய ஒரு அங்கீகாரம் இந்தியாவினுடைய அனுசரணை எமது மக்களுக்கு தேவையாக இருக்கின்றது.
இந்தியாவினுடைய அங்கீகாரம் எமக்கு கிடைக்குமாக இருந்தால் உலகமும் நமது பக்கம் திரும்பிப் பார்க்கும் அத்தோடு எமது மக்களுடைய நியாயமான பிரச்சினைக்கு தீர்வு காண முன்வரும் என எதிர்பார்க்கின்றோம்.
எனினும் அந்த சூழ்நிலை தற்போது உருவாகி இருக்கின்றது அண்மையில் தமிழ் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் பிரதமர் ஈழத் தமிழர்களுக்கான உரிமை தொடர்பாக குரல் கொடுத்திருக்கின்றார். தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுப்பதாக கூறி இருக்கிறார்.
அவருக்கு நாங்கள் எமது மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவிப்பதோடு உண்மையிலே இந்தியாவினுடைய அனுசரணை இல்லாமல் ஈழத்தமிழர்களுக்கான பிரச்சனைக்கு தீர்வு இலங்கைத் தீவிலே சாத்தியமில்லை என்பதனை எமது மக்களுக்கு அன்போடு எடுத்து கூறுகிறோம்.
எதிர்காலத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியினராகிய நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் பேசுவதற்கு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.
இன்றுவரை இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் நாங்கள் ஈடுபடவில்லை எனினும் எதிர்காலத்தில் இந்திய அரசாங்கத்துடன் ஆரம்பிப்பதற்குரிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டு உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்
Post a Comment