வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் அரசியல் வாதிகளின் எடுபிடிகளாகக் கூடாது என முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ரெலோ இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடையம் தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சபா.குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்..
வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் சிவில் சமூக அமைப்புக்கள் 2009 ஆண்டின் பின்னர் பலமாக இல்லை என்பது பாரிய குறைபாடாக தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. காரணம் மக்களின் ஒன்றிணைந்த குரலை ஒரு திரட்சியாக்கி அரசியல் அரங்கில் அதிர வைப்பதற்கும் பாதிக்கப்பட்ட தரப்புக்களின் குரலை உயர்த்தவும் அதற்கான நீதியை பெற்றுக் கொள்ளவும் பக்க சார்பு அற்ற அமைப்பாக சிவில் சமூக அமைப்பே வழி நடத்த முடியும். இதனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிவில் சமூக அமைப்புக்கள் பலம் பெறுவது காலத்தின் கட்டாயம் ஆகும்.
தமிழர்களின் விடுதலையை, அரசியல் அபிலாசைகளை, மறுக்கப்பட்ட நீதியை,பாதிக்கப்பட்ட தரப்பின் நியாயங்களை,அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை, கட்சிகளின் கொள்கை உறுதியை சரியாக வழி நடத்த பலமான அரசியல் கலப்பற்ற பக்க சார்பற்ற சிவில் சமூக அமைப்பு அவசியமானதாகும்.
தமிழர்களின் விடுதலைக்கு அரசியல் பிரவேசம் இல்லாத சுயலாப நோக்கம் இல்லாத சிவில் சமூக தலைவர்கள் அவசியம் அந்த வகையில் தற்போது வடக்கு கிழக்கில் ஒன்றிணைந்த சிவில் சமூக அமைப்புக்கள் தங்களை முன்மாதிரியாக காட்டி ஈழத் தமிழர்களுக்கு நேர்மையான அமைப்பை கட்டியெழுப்ப வேண்டும்.
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை ஒரு மாபெரும் மக்களின் திரட்சியை ஒன்றிணைத்த சிவில் சமூக அமைப்புக்கள் தொடர்ந்து அரசியல் கலப்பற்று அரசியல் பதவிகளை சுயலாபத்திற்காக குறி வைக்காது ஒரு சில அரசியல்வாதிகளின் எடுபிடிகளாக மாறாது அரசியல் கட்சிகளின் பின்னால் போகாது இனத்தின் விடுதலைப் பயணத்திற்கு சரியான பக்க சார்பற்ற வழிகாட்டியாக செயல் ஆற்றுங்கள். நிச்சயமாக நீங்கள் தமிழர்களின் இன ஒற்றுமைக்கும் அரசியல் கட்சிகளின் ஒற்றுமைக்கும் வலுச் சேர்ப்பவர்களாக மாறுவீர்கள்.
இதுவரை சிவில் சமூக அமைப்பின் பலத்தை ஒரு சிலர் தவறாக பயன்படுத்தியதன் வெளிப்பாடே மக்கள் சிவில் சமூக அமைப்புக்களில் நம்பிக்கை இழந்தமையாகும் ஆகவே தற்போது உள்ள வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் நேர்த்தியான செயற்பாடுகளை முன்னெடுத்து இனத்தின் விடுதலைக்கு அர்பணிப்புடன் பணியாற்றுங்கள் உங்களுக்கு பாதுகாப்பாக சகல சக்திகளும் இருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை வழி நடத்துபவர்களாகவும் தடம் மாறும் அரசியல்வாதிகளை மக்களுக்கு இனம் காட்டுபவர்களாகவும் உங்கள் செயற்பாடுகள் அமைய வேண்டும்.பாரிய மக்கள் எழுச்சியின் வெற்றியை தனி மனித வெற்றியாக கற்பனை செய்து புதிய அமைப்புக்களை உருவாக்குதல் மக்கள் மத்தியில் சிவில் சமூக அமைப்பின் நல்லெண்ணத்தை சிதைத்துவிடும் ஆகவே பொது நோக்கில் இனத்தின் விடுதலையே எமது வெற்றி என ஒன்றிணைவோம் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Post a Comment