யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகளுக்கு மட்டும் அனுமதி - மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விழாவை நடாத்தத் தீர்மானம்! - Yarl Voice யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகளுக்கு மட்டும் அனுமதி - மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விழாவை நடாத்தத் தீர்மானம்! - Yarl Voice

யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகளுக்கு மட்டும் அனுமதி - மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விழாவை நடாத்தத் தீர்மானம்!




நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந் தொற்று அபாயத்தை அடுத்து, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, சுகாதாரத் துறையினால் வழங்கப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், பட்டம் பெறுபவர்களைத் தவிர பெற்றோர் மற்றும் விருந்தினர்கள் எவரும் விழா மண்டபத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் யாழ். பல்கலைக்கழக கொவிட் 19 தடுப்பு, முகாமைத்துவக் குழுவின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி எஸ். சுரேந்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. 

நிகழ்வு தொடர்பாக ஊடகங்களுக்கான அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர், கொவிட் 19 தடுப்பு, முகாமைத்துவக் குழுவின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி எஸ். சுரேந்திரகுமாரன், பதிவாளர் வி.காண்டீபன், கல்வி, வெளியீட்டுக் கிளையின் உதவிப் பதிவாளர் எஸ். கே. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது, யாழ். பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர் கருத்துத் தெரிவிக்கையில், பட்டமளிப்பு விழாவின் போது கைக்கொள்ளப்படவேண்டிய நடைமுறைகள் - ஒழுங்குகள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டார்.
 
சமகால கொவிட் 19 பெருந்தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகம் மேற்படி பெருந் தொற்றுப் பரவலைத் தடுப்பதில் அதி கூடிய கவனத்தைச் செலுத்தியுள்ளது. நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந் தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் : அறிவுறுத்தல்கள் இறுக்கமாகப் பின்பற்றப்படும்.  
 
இதன் பிரகாரம் பட்டம் பெற வருபவர்கள் மட்டும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பட்டமளிப்பு விழாவில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவர். பட்டதாரிகள் அனைவரதும் வெப்பநிலை பரிசோதிக்கப்படுவதுடன், அவர்களின் கைகளும் சுத்திகரிப்புத் திரவத்தினால் கழுவப்படும். சமூக இடைவெளியைப் பேணும் வகையில் பங்கேற்பவர்கள் ஆகக் குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளியில் அமர்வதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
 
நிகழ்வுகளில் பங்கு பற்ற வந்தவர்களோ, ஏனையவர்களோ உள்ளக விளையாட்டரங்குக்கு வெளிப் புறங்களில் ஒன்று கூடுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. மேலும் நிகழ்வு இடம்பெறும் சுற்றாடலில் உணவு கையாளும் நிலையங்கள், சிற்றுண்;டிச்சாலைகளை அமைப்பதற்கு இம்முறை அனுமதி வழங்கப்படவில்லை. பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள கொவிட் 19 தடுப்பு, முகாமைத்துவக் குழு மேற்படி நடைமுறைகளை இறுக்கமாகவும், வினைத்திறனுடனும் மேற்கொள்ளத் தயாராக உள்ளது.  
 

 பட்டம் பெறும் மாணவர்கள் உள் நுழையும், வெளியேறும் பாதைகள் நன்கு வரையறை செய்யப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் பட்டதாரிகள் ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள மருத்துவ பீட பிரதான வாயிலுக்கு ஊடாக மட்டுமே உள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவர்;. பட்டமளிப்பு அமர்வு முடிந்து வெளியேறுவோர் பல்கலைக்கழக மைதானத்தின் பிரதான வாயிலூடாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படுவர். 

ஆடியபாதம் வீதி, வளாக வீதி, தபால் பெட்டி வீதி மற்றும் மைதானத்தை அண்டிய பகுதிகளில் வாகனங்கள் தரித்து நிற்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. வளாக ஒழுங்கையினுள் வாகனங்களில் வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பல்கலைக்கழகப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் போக்குவரத்து ஒழுங்குகளைக் கவனிப்பார்கள். பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவார்கள்.  

பட்டமளிப்பு விழா அரங்குக்கு உள்ளேயும், வெளியேயும், சுகாதார நடைமுறைகளைப் பின் பற்றுவதோடு, இயலுமானவரை தேவையற்ற முறையில் கூட்டம் கூடுவதைத் தவிர்த்து – சமூக இடைவெளியைப் பேணுவதன் மூலம் இந்த நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு பெறுவதற்கு பல்கலைக்கழக சமூகம் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றது.

ஊடக நிறுவனங்களுக்குத் தேவையான செய்திகளையும், தகவல்களையும் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு ஊடாக வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இம்முறை பட்டமளிப்பு விழா நிகழ்நிலையாக இணையம் வாயிலாகவும், தொலைக்காட்சி ஊடாகவும் ஒளிபரப்பப்படும்.
வழமை போன்று பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி நினைவுப் பேருரைகளும் இடம்பெறவுள்ளன. சேர். பொன். இராமநாதன் நினைவுப் பேருரைகளை இம்முறை சிரேஸ்ட பேராசிரியர் வ.புஸ்பரட்ணம் “யாழ்ப்பாணக் கோட்டையில் அண்மைக் காலத் தொல்லியல் ஆய்வுகள் - ஓர் புதிய பார்வை” என்ற தலைப்பிலும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையை இம்முறை முன்னாள் துணைவேந்தரும், சிரேஸ்ட பேராசிரியருமான செல்வி வசந்தி அரசரட்ணம் “கல்விப் புலத்தில் பெண்கள் - இலங்கை அரச பல்கலைக்கழகங்களைச் சிறப்பாகக் கொண்டது” என்ற தலைப்பிலும் வழங்கவுள்ளனர் என்றார்.

தொடர்ந்து, யாழ். பல்கலைக்கழக கொவிட் 19 தடுப்பு, முகாமைத்துவக் குழுவின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி எஸ். சுரேந்திரகுமாரன் கருத்துத் தெரிவிக்கையில்,
 
யாழ். மாவட்டத்தினுள்ளே கொரோனாப் பெருந்தொற்றுப் பரவல் ஏற்பட்டுவிடலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ற வகையில் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்கு ஏற்ற வகையில், சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களைக் கருத்தில் எடுத்து, எங்களுடைய மாணவர்களுக்கு இந்தப் பட்டமளிப்பைச் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக இந்தப் பட்டமளிப்பு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம். உள்ளக அரங்கில் மாணவர்களை உள்வாங்கும் போது, சகலரையும் பதிவுக்கு உட்படுத்தி, அவர்களிடையே சமூக இடைவெளியைத் தெளிவாகப் பேணி, அவர்களிடம் எதுவித நோய் அறிகுறியும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அனுமதிக்கவிருக்கிறோம். உள்ளக அரங்கு மிகுந்த காற்றோட்டம் உள்ளதாகக் காணப்படுவதால் ஏற்கனவே சுகாதாரப் பகுதியினர் அறிவித்தபடி, ஒரே நேரத்தில் 150 பட்டதாரிகள் மட்டுமே உள்வாங்கப்படவுள்ளனர். அதற்கமைய ஒவ்வொரு அமர்வும், மேலும் மூன்று அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்துக்கு ஒரு சமூகப் பொறுப்பு உண்டு. அதனால் அனைத்தையும் கருத்தில் கொண்டே நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. முக்கியமாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் எம்முடன் தொடர்பு கொண்ட வண்ணமுள்ளனர். அவர்களின் அறிவுறுத்தல்களையும், சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களையும் கவனத்தில் எடுத்துள்ளோம். தற்போதைய நிலைமைகளைக் கருத்தில் கொண்டே நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. மாற்றங்கள் ஏற்படுமாயின் அதற்கேற்றவாறு பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
 

0/Post a Comment/Comments

Previous Post Next Post