நாட்டின் இயற்கை வளங்களை பேணிப் பாதுகாக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் முக்கிய பொறுப்பாகவும் கடமையாகவும் இருக்கிறது. காடுகள் என்பது ஒரு நாட்டில் இருக்கக்கூடிய மிகப்பெரிய வளமாகும். காடுகளை அழிப்பதென்பது எமது சுற்றுச் சூழலை பாதிப்பதோடு காட்டு ஜீவராசிகளுக்கும் பெரும் துரோகத்தை இழைக்கும் செயலாகும்.
தற்பொழுது உள்ள இந்த அரசானது தமிழர் தாயக பகுதியான வடகிழக்குப் பகுதிகளில் உள்ள காடுகளில் பல ஏக்கர் காடுகளை அழித்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக இருக்கின்றது.
அந்த வகையில் சிரச லக்ஷபதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாக்கியா அபேரத்ன எனும் 19 வயது யுவதி சிங்கராஜா வனத்தின் காடுகள் அழிக்கப்பட்டு ஒரு விடுதி கட்டப்பட இருக்கிறது என கூறியிருந்தார். மேலும் அவற்றை அவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததனால் தான் வெளியே தெரிய வந்தது எனவும் கூறினார். இதனை அடுத்து அந்த யுவதியை சிங்களப் பொலிசார் அச்சுறுத்தும் விதமாக விசாரணை செய்தார்கள். இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டால் அதை கேட்பதற்கு நாட்டு மக்களுக்கு உரிமை இருக்கிறது என்பது பொதுவான விடயமாகும். ஆனால் அந்த யுவதியை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவரது ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டிருப்பது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்று கூறுக்கொள்ளும் அரசாங்கத்தின் இச் செயல் ஒரு பொறுப்பான செயல் அல்ல.
மேலும் இந்த யுவதியை அச்சுறுத்தும் விதமாக நடந்துகொண்ட சிங்கள பொலிசாரை தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வன்மையாக கண்டிப்பதோடு, அந்த யுவதிக்கு பாதுகாப்பையும் உரிமையையும் பெற்றுக் கொடுக்குமாறும் இந்த காடழிப்பு சம்பவத்தின் பின்னால் எவர் இருந்தாலும் அவர்கள் மீது பாராபட்சமின்றி சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் நாட்டின் சம்மந்தப்பட்ட தரப்பினர் அனைவரிடமும் தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை வலியுறுத்தி நிற்கிறது.
எஸ்.நிஷாந்தன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை.
Post a Comment