காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வதேச நீதி கோரி திருகோணமலை மாவட்டத்தில் சிவன் கோயிலுக்கு முன்பாக முன்னெடுத்திருக்கும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.
குறித்த விடையம் தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நிர்வாகச் செயலாளர் நித்தி மாஸ்டர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
”போரின் இறுதியில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், இனப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு ஐ நா மனிதவுரிமைப் பேரவையில் பரிகார நீதி கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை என்பதை ஐ நா மனிதவுரிமைப் பேரவையின் ஆணையாளரின் 12/02/2021 அறிக்கை தெட்டத் தெளிவாக கூறியுள்ளது.
அத்துடன் சர்வதேச நீதிப் பொறிமுறைகளின் ஊடாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையும் ஆணையாளர் உறுதிபடக் கூறியுள்ளார்.
இதன் பிற்பாடு பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பு உறுதியாக ஒரே நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தெளிவு படுத்த இப்படியான ஐனநாயகப் போராட்டங்கள் அவசியமானதுடன் அதனை அனைத்து தரப்பினரும் ஆதரித்து நீதி வேண்டிய குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும்.
இந்த நிலைப்பாட்டில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் உறுதியாக பல முனைகளிலும் பணியாற்றி வருவதுடன் இனத்துக்கான நீதி பலவீனமடைவதை எந்த வகையிலும் அனுமதிக்கப் போவதில்லை.
அந்தவகையில் நடைபெறும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவதுடன் தமிழ்த் தேசிய சக்திகள் அனைவரையும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் ஏனவும் நித்தி மாஸ்டர் தெரிவித்தார்.
Post a Comment