எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளேன். அவரது மரணம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை பேரிழப்பாகும். அண்மைக் காலமாக அவர் சுகவீனடைந்திருந்த செய்தி அறிந்த போதும் அவர் தேறி வருவார் என்ற நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது.
தமிழ் மக்களுடைய அரசியல் போராட்ட வரலாற்றில் கத்தோலிக்க மத குருமார்கள் பலர் பாரிய பங்களிப்பைச் செய்து வந்துள்ளனர். அந்த வரிசையில் மிக முக்கியமானவர் முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை அவர்கள்.
தமிழ்மக்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் அவரது பங்களிப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றது.
சாட்சிகளற்று போர் என்ற பெயரில் இன அழிப்பு இடம் பெற்ற காலத்தில் அழிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களின் சாட்சியாகவும் துயரங்களைச் சுமக்கும் மக்களின் சுயாதீன குரலாகவும் ஆண்டகை விளங்கினார்.
போரில் இறந்த மக்களின் எண்ணிக்கையை ஐ.நா. நிபுணர் குழு 40இ000 எனக் குறிப்பிட்டிருந்த நிலையில் 146இ679 பேர் இறுதி யுத்தத்தின் காணாமல் ஆக்கப்பட்டும் கொல்லப்பட்டும் உள்ளார்கள் என்ற உண்மையை உலகமெங்கும் ஆதாரத்துடன் உரத்துக் கூறினார்.
2019ஆம் ஆண்டு தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ்மக்களின் அரசியல் கேள்விக்குறியான நிலையில் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் தமிழ் மக்களினுடைய கூட்டிருப்பையும் கூட்டுரிமையையும் கூட்டடையாளத்தையும் பேணுவதற்கு தமிழ்த்தேசிய அரசியலைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதே சரியானது என்ற உறுதியான தீர்மானத்தை எடுத்தார்.
இது பற்றிக் கருத்துருவாக்கம் செய்து இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக தமிழ் சிவில் சமூக அமையம் உருவாக்கப்பட்ட போது அதன் தலைவராகப் பொறுப்பேற்றார்.
தமிழ் மக்கள் தங்கள் மீதான ஒடுக்கு முறைக்கு முகம் கொடுக்க வேண்டுமானால் பலமான நிலையில் இருக்க வேண்டும். அதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகளும் தமிழ்த்தேசியம் சார்ந்து செயற்படும் பொது அமைப்புக்களும் ஒரு குடையின் கீழ் வர வேண்டும் எனக் கருதினார். அத்துடன் அதற்காக அரும்பாடுபட்டார்.
இலங்கைத்தீவில் நடைபெற்றது இன அழிப்புதான் என்றும் அதற்கு இலங்கை அரசே முழுப்பொறுப்பு என்றும் இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற்று தமிழ்மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் உரக்கக் குரல் எழுப்பினார்.
இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் தமிழ் அரசியல் வரலாற்றிலும் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றிலும் மறக்க முடியாத மிகப் பெரும் ஆளுமை. ஆன்மீகத் தலைவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரண புருஷர்.
சத்திய இலட்சியத்தினை வாழ்வாக வரித்துக்கொண்ட மகத்தான மனிதர்களை சாவு அழித்து கிடையாது. இவ் உலகப்பந்தில் இறுதித் தமிழன் உயிர்வாழும் வரை ஆண்டகையின் நினைவை அழித்து விடமுடியாது. அந்தவகையில் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் ஓர் அடையாளமாக என்றும் தமிழ்மக்களின் மனங்களில் உயிர் வாழ்வார்.
அவரது பிரிவால் துயருற்றிருக்கும் கத்தோலிக்க மக்கள் மற்றும் உலகளவில் பரந்து வாழும் தமிழ்மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக அன்னாரினது புகழுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் பெரும் பாக்கியம் கிட்டாததையிட்டு ஏமாற்றமடைகின்றேன்.
அவரது இலட்சியத்தை வென்றெடுப்பதே தமிழ் மக்கள் ஆண்டகைக்குச் செய்யும் சிறந்த அஞ்சலியாக இருக்கும்
வி.மணிவண்ணன்
முதல்வர்
யாழ்.மாநகர சபை
Post a Comment