ஆயர் பெருந்தகையை சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோம். தமிழ் அரசியல் கைதிகள் - Yarl Voice ஆயர் பெருந்தகையை சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோம். தமிழ் அரசியல் கைதிகள் - Yarl Voice

ஆயர் பெருந்தகையை சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோம். தமிழ் அரசியல் கைதிகள்



மறைந்த முன்னாள் ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இராஜப்பு ஜேசப் அவர்களுக்கான இரங்கல் செய்தியை சிறைகளுக்குள் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், தமது பெற்றோர், உறவினர்கள் ஊடாக குரலற்றவர்களின் குரல் அமைப்புக்கு  தெரியப்படுத்தியுள்ளனர்.

அவர்களுடைய குறித்த இரங்கல் அறிக்கையில்,
உண்மையான இயேசுவின் சீடராக வார்த்தைகளால் அல்லாமல் செயல்களால் வாழ்ந்து காட்டியவர், முன்னாள் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள். அன்னார் தனது 81 ஆவது அகவையில் ஆண்டவர் கட்டளையின் பிரகாரம் சிந்திப்பதை நிறுத்தி நிரந்தர ஓய்வுக்குள் தன்னை ஒப்படைத்துக்கொண்டுள்ளார்.

'நீங்கள் மற்றவர்களுக்கு செலுத்தும் அன்பில் இருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை நான் அறிந்து கொள்வேன்"  என்ற இயேசு பிரானின் அருள் வாக்கிற்கு வடிவம் கொடுத்து, ஒடுக்கப்படுபவர்களினதும் திக்கற்றவர்களினதும் உண்மைக்குரலாக தேசம் தாண்டி ஒலித்த ஒரு தமிழ் தேசியப்பற்றாளரை இன்று தமிழ் உலகம் இழந்து துயருற்று நிற்கின்றது.

வேடம் அணிந்து கோசமிட்டு முதன்மை இருக்கைகளை தம்வசப்படுத்தி மாலை மரியாதைகளுடன் வலம்வருகின்ற வெற்றுச்சமூக பற்றாளர்களை போலன்றி, சொல்லுக்கும் செயலுக்குமுள்ள ஆழமான தொடர்பை வெளிப்படுத்தி நீதி, நேர்மைக்காக துணிவோடு போராடிய அறப்போராளியாக தன் அடையாளத்தை பதித்துவிட்டு சென்றிருக்கின்றார் ஆயர் பெருந்தகை.

 'பொதுப்பார்வைக்குக் காட்சிப்படுத்தும் எந்தச்செயல்களிலும் சாட்சியம் இருப்பதில்லை விளம்பரம் இல்லா நற்காரியங்களே ஆண்டவன் சன்னிதானத்தில் என்றும் விலைமதிப்பானவை" என்பதற்கொப்ப, சிறைக்கொட்டடிகளில் சிதைவுற்றுக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் அத்தியாவசிய விடயங்களில் அழையா விருந்தாளியாக தன்முனைப்புக் கொண்டு பலநற்காரியங்களை செய்திருந்தார் ஆயர் அவர்கள். 

மனித நேயமும். பிறரன்பும் மிகுந்த பெருந்தகையான இவர் தமிழ் அரசியல் கைதிகள் சிறைவைக்கப்பட்டிருக்கும் அத்தனை சிறைச்சாலைகளினதும் வாசல்களை தரிசித்து கைதிகளின் மனங்களில் தன்னம்பிக்கையை ஊட்டி ஒரு அன்னையை போல ஆற்றுப்படுத்தி ஆசிர் வதித்து வந்திருந்தார்.

சிறைச்சுவர்களுக்குள் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏதேனும் அல்லல் நேர்ந்துவிட்டது என்று அறியக்கிடைத்தால், உடனடியாக செயற்பட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜேயவத் ஜேயவர்தனா அவர்களுடன் தொடர்பு கொண்டு நிலமை தொடர்பில் கவனமீட்ட என்றுமே பின்னின்றதில்லை. அரசில் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் அரச தலைவர், பிரதம நீதியரசர் முதற்கொண்டு சட்டமா அதிபர், நீதி மற்றும் சட்டத்துறை சார் அதிகாரிகளையும் அரசியற் தலைவர்களையும் நேரடியாக சென்று சந்தித்து கலந்துiராயாடி வந்திருந்தார். 

மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களை சுமந்தார் என்றால் மிகையில்லை.
இவ்வாறு சொற்கோர்வைகளுக்குள் மாத்திரம் வரையறுத்துவிட முடியாத பரந்து விரிந்த செயலெல்லையை கொண்டிருந்த அதி வணக்கத்துக்குரியவாரின் அர்ப்பணிப்புக்களில் இட்டு நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளமையானது பெரும் வருத்தத்திற்குரியதே.

'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று அலுத்தோயாது மக்கள் பணி செய்து வந்த மரியாதைக்குரிய மகானின் பேரிழப்பால் துயரமடைந்திருக்கின்ற அத்தனை மனித இதயங்களுக்கும் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாம் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அத்துடன் ஆண்டகை அவர்களின் ஆத்மா பரம பதமடைய சிறை அறைகளுக்குள் இருந்தபடி சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோம். என குறிப்பிடப்பட்டுள்ளது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post