அடக்குமுறைகளுக்கெதிராக கிளர்ந்தெழுந்த உரிமைக் குரலொன்று இன்று தொனியிழந்து ஓய்ந்து விட்டது என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் மறைவு குறித்த இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் தனது இரங்கல் செய்தியில்;
தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்ட தன் வாழ்நாளில் பெரும்பங்கை தியாகம் செய்தவர் பேராயர் இராயப்பு யோசப் ஆண்டகை.
ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்களோடு மக்களாக நின்று துணிச்சலோடு குரல் கொடுத்த ஓர் உரிமைக் குரல் இன்று ஓய்ந்துள்ளது. இது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும். பேராயரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று.
ஆண்டகையின் மறைவால் துயருற்றிருக்கும் உறவினர்கள் மற்றும் கத்தோலிக்க திருச்சபை மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்துடன் ஆண்டகையின் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகி அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
Post a Comment