ஊர்காவல்துறை பிரதான சாலையில் இயங்கி வந்த மதுபானசாலை தீவக சிவில் சமூக அமைப்பு. பாடசாலை சமூகம். ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் மற்றம் பல மக்கள் நலன் விரும்பும் அமைப்புகளின் எதிர்ப்பையடுத்து
2016 இல் மூடப்பட்டது. அதனை மீள உயிர்ப்பிக்க அரசியல்வாதிகள் பலர் முயற்சி செய்வதாக அறியவருகிறது.
இது தொடர்பாகத் தீவகம் வடக்குப் பிரதேச செயலாளரினால் பொது மக்களுக்காக விடுக்கப்பட்ட சுற்று நிருபம் ஒன்றில் பின்வருமாறு கோரிக்கை விடுக்கப் பட்டிருக்கிறது.
மதுபான சாலை இடமாற்றம் - மெற்றோ வைன் ஸ்ரோர்ஸ் ( Metro Wine Stores) கடந்த காலத்தில் சுங்கவீதி ஊர்காவற்துறையில் இயங்கிய மேற்படி மதுபானசாலை யினை மீளச் செயற்படுத்துவதற்காக சுருவில் வீதி ஊர்காவற்துறை எனும் முகவரியைக் கொண்ட காணியினைத் தெரிவு செய்துள்ளனர். எனவே அதற்கான அனுமதியினை வழங்குவது தொடர்பாகப் பிரதேசப் பொது மக்களின் கருத்துக்களை 29.03.2021 ஆம் திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் கிராம உத்தியோகத்தர் ஊடாக எமக்குத் அறியத் தருமாறு கேட்டுக் கொள்ளுகிறோம் என அச்சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அந்தச் சுற்று நிருபத்தில் அதை முன்னர் மூடியது தொடர்பாக எந்தவிபரங்களையும் மக்களுக்குத் தெரியப்படுத்தாது இருட்டடிப்புச் செய்துள்ளதாக தீவக சிவில் சமூக அமைப்பின் பொருளாளர் கருணாகரன் குணாளன் விசனம் தெரிவித்திருக்கிறார். அதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் ஆளுந்தரப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் ஏதோ இயங்கிக் கொண்டிருந்ததை இடமாற்றம் செய்யப்போவது போன்று மாயை ஒன்றினை ஏற்படுத்தி மக்கள் அனுமதியைப் பெற்றுக் கொள்ள அவர்கள் முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
2019 ஆண்டு காலப் பகுதியில் இந்த மது பான நிலைய அனுமதியை வைத்திருந்தவர்கள் அதனை மீளத் திறப்பதற்கு அனுமதி கோரி பிரதேசச் செயலாளர் ஊடாக ஊர்காவற்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரியிருந்த போதிலும் அப்போதைய ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த ஈ.சரவணபவன், சி.சிறீதரன் . விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அங்கயன் இராமநாதன் ஆகியோர் அதனை நிராகரித்திருந்தனர்.
ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய குற்றவியல் வருடாந்த அறிக்கையின்படி 2016 க்குப் பின்னரான காலப்பகுதியில் குடும்ப வன்முறை, கோஷ்டி மோதல்கள் மற்றும் வன்முறைகள் கணிசமான வீழச்சியைக் கண்டிருந்ததற்கு மேற்படி மது பான சாலை மூடப்பட்டிருந்ததும் ஒரு முக்கிய காரணமென சிவில் சமூக அமைப்புகள் நம்புவதாகவும் குணாளன் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல மது பான சாலைக்குப் புத்துயிரளிக்கும் இச் சமூக விரோதச் செயலின் பின்னணியில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இருப்பதாகவும் தீவக மக்கள் பேசிக் கொள்ளுகின்றனர்.
இந்தச் சமூக அழிவை ஏற்படுத்தக் கூடிய மது பான சாலை திறப்பை எதிர்த்து எதிர்வரும் 08.04.2021 அன்று காலை 10 மணியளவில் ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்றலில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் அனைவரையும் இதில் பங்குபற்றுமாறும் தீவக சிவில் சமூக அமைப்பினர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.
Post a Comment