சாவகச்சேரி நகரசபையின் பொதுச் சந்தை வர்த்தகர்கள் கொரோனா நடைமுறைகளை பின்பற்ற தவறுகின்ற பட்சத்தில் அவர்களின் வர்த்தக நிலையங்கள் உடனடியாக 7 நாட்களுக்கு மூடப்படும் என நகராட்சி மன்றின் உபதவிசாளரும் சந்தைக்குழு தலைவருமான அ.பாலமயூரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்மராட்சியில் கொரோனா பரவல் வேகமெடுத்ததை தொடர்ந்து சாவகச்சேரி நகராட்சி மன்றம் பல்வேறு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக்குவது தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். கொடிகாமம் பொதுச்சந்தையினால் கொரோனா தொற்று பரவியமையினால் நகரமே முடக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலைமை எமது சாவகச்சேரி நகர சந்தைக்கு ஏற்படாமல் இருக்க நாம் முன்னேற்பாடான சுகாதார நடைமுறைகளை செயற்படுத்தி உள்ளோம். மாஸ்க் அணியாமல் எவரும் சந்தை வளாகத்திற்குள் நுழைய முடியாது.
வர்த்தக நிலையங்களில் அளவுக்கு அதிகமான வாடிக்கையாளர்களை அனுமதிக்க முடியாது. ஏலம் கூறுகின்ற பகுதிகளில் கொள்வனவாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
மேலும் வர்த்தக நிலையங்களில் கொள்வனவு செய்கின்ற வாடிக்கையாளர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாவிட்டாலும் வர்த்தக நிலையம் இழுத்து 7 நாட்களுக்கு மூடப்படும்.
நாளை முதல் சாவகச்சேரி சந்தை வளாகத்தில் பொலிஸார் மற்றும் பொதுச்சுகாதாரப் பரிசோதகரோடு இணைந்து தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
இதன்போது சுகாதார நடைமறைகளை பின்பற்றாதவர்கள் மீது தயவு தட்சணமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என சாவகச்சேரி நகரசபையின் உபதவிசாளரும் சந்தைக்குழு தலைவருமான அ.பாலமயூரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment