கொரோனா காலத்திலாவது தங்களை குடும்பத்தோடு வாழ வைக்க வேண்டும் என சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 78 பேர் மற்றும் வங்கதேசம், நைஜீரியா, சூடான், பல்கேரியா நாடுகளைச் சேர்ந்த 104 பேர் தற்போது உள்ளனர். சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் சட்டவிரோதமாக வெளி நாடு செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டவர்கள்.
தற்போது கொரோனா தொற்று பரவிவரும் சூழலில், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில்,
“இலங்கையில் நடைபெற்ற போரினால் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கிறோம். பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். எங்களை பொய் வழக்கில் கைது செய்தும், குற்ற வழக்கின் தண்டனைக் காலத்திற்கு மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர்” என்று தெரிவிக்கின்றனர்.
தங்கள் மீதான வழக்குகளை சட்டப்படி நடத்தி, விடுதலை செய்யக் கோரியும் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி தற்கொலை முயற்சி வரை சிறப்பு முகாமில் அவர்கள் நடத்தியுள்ளனர்.
ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி சிறப்பு முகாமிலேயே பல ஆண்டுகளாக தடுத்து வைத்துள்ளனர் என்றும் இதனால், தங்களுக்கு கிடைக்க வேண்டிய சட்ட ரீதியிலான உதவியும் மறுக்கப்பட்டு மனித உரிமையும் மீறப்படுவதாக அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் கொரோனொ தொற்றுக்கு சிகிச்சை பெற்று, மீண்டும் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பைட்டுள்ளனர். மாஸ்டர் செல்வம் என்பவர் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளார்.
Post a Comment