தமிழ்நாட்டின் கோடிப்புறத்தில் வளரும் சீன நிழல் - கேணல் ரமணி ஹரிஹரன் - Yarl Voice தமிழ்நாட்டின் கோடிப்புறத்தில் வளரும் சீன நிழல் - கேணல் ரமணி ஹரிஹரன் - Yarl Voice

தமிழ்நாட்டின் கோடிப்புறத்தில் வளரும் சீன நிழல் - கேணல் ரமணி ஹரிஹரன்



இலங்கையில் கடந்தமாதம் துறைமுக நகர சட்டம் நிறைவேற்றப்பட்டமையால்  பாக்குநீரிணையின் இரு மருங்கிலும் வாழும் மக்கள் மத்தியில் விசனமும் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது.கொழும்பு துறைமுகத்தை எதிர்நோக்கியவாறு நிர்மாணிக்கப்பட்டுவரும் துறைமுகநகரத்தில் விசேட பொருளாதார வலயம் சீனாவின் கட்டுப்பாட்டில் வருவதன் விளைவாக தென்னிந்தியாவுக்கு அதிகரித்துவரும் அச்சுறுத்தல் பற்றி ஊடகங்கள் பெருமளவு பரபரப்பை தோற்றுவித்துவருகின்றன.

   அடுத்த இரண்டு தசாப்தங்களில் கொழும்பு துறைமுக நகரம், துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச நிதியியல் மையமாக முழுமை முதிர்ச்சியுடையதாக  வளரப்போகிறது. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், சீனஅரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்புகள் நிர்மாண கம்பனியின் ஒரு துணை நிறுவனமான சீன துறைமுக பொறியியல் கம்பனி 85 வீதமான நிலத்தின்  குத்தகை உரிமையை 99 வருடங்களுக்கு கொண்டிருக்கும்.

    கொழும்பு துறைமுகநகரத்தினால் தோற்றுவிக்கப்படக்கூடிய பீதி வெறுமனே தென்னிந்தியாவுக்கு மாத்திரமானதல்ல, முழு இந்தியாவுக்குமானது.உண்மையில்,  வர்த்தகரீதியாக நோக்குகையில் கொழும்பு துறைமுகம்
முக்கியத்துவம் வாய்ந்தது ஏனென்றெல், இந்தியாவின் 70சதவீதமான கொள்கலன் போக்குவரத்துக்கள் இந்த துறைமுகமூடாகவே நடைபெறுகிறது. மூலோபாய நிலைவரங்களில், கொழும்பு துறைமுகத்துக்கு நெருக்கமான சீனப்பிரசன்னம் வித்தியாசமான சூழ்நிலையை ஏற்படுத்தும். ஆனால், அதையும் விட  கவனிக்கவேண்டியது ஒன்றுண்டு.வர்த்தகமும் வாணிபமும்,தொலைத்தொடர்பும் நிதியியலும் உட்கட்டமைப்புகள் என்று பன்முக சீன நலன்களை கொழும்பு துறைமுகநகரம் சட்டரீதியானவையாக்குகிறது.

    இது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்கத்தை  சவாலுக்குள்ளாக்குவதில் சீனாவுக்கு ஒரு பெரிய அனுகூலத்தை  கொடுக்கிறது.அத்துடன் இது அபிவிருத்தி உதவி என்ற பெயரில் இந்தியாவின் அயலகத்தில் செல்வாக்கை மேம்படுத்த சீனா அதன் ஈடிணையில்லா பணப்பல ஆற்றலை பெருக்கவும் உதவும்.

   இலங்கையில் அதிகரிக்கும் சீன செல்வாக்கு குறித்து பல இலங்கை தலைவர்கள் கவலைப்படவும் செய்கிறார்கள்.
கொழும்பு அதிமேற்றிராணியார் கார்டினல் மல்கம் ரஞ்சித் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார்.  " அபிவிருத்தி என்பது நாட்டின் வளங்களை விறபனை செய்வதல்ல.......நாட்டைப் பாதுகாப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்.தயவுசெய்து எமது நாட்டை வேறுநாடுகளுக்கு கொடுக்காதீர்கள்" என்று அவர் கேடடிருக்கிறார்.முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க  நாடு எதுவுமாகவில்லை, சீனாவின் காலனியாக மாறுகிறது என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

  விசேட பொருளாதார  வலயம் சீனாவுக்கு வர்த்தக, நிதித்துறை நன்மைகைளை மாத்திரம் வழங்கவில்லை. ஆனால், அது இந்தியாவின் தொலைத் தொடர்பு கட்டமைப்புகளுடன் தலையீடு செய்து ஒற்றுக்கேட்பதிலும் போர்க்கப்பல்களின் நடமாட்டங்களை அவதானிப்பதிலும்  இணையவெளி அச்சுறுத்தலை அதிகரிப்பதிலும் சீனாவின் புலனாய்வு மற்றும் எதிர்ப்புலனாய்வு நடவடிக்கைகளை பெருக்கச்செய்யும்.இவை எல்லாவற்றுக்கும் மேலாக விசேட பொருளாதார வலயம்  இந்திய நலன்களுக்குஎதிரான முகவர்கள் ஊடுருவி செயற்படக்கூடிய வசதியான இடமாக எளிதாக மாறிவிடும் வாய்ப்பும் இருக்கிறது.கடந்த காலத்தில் கொழும்பில் உள்ள   பாகிஸ்தான் தூதரகத்தின் ஊடாக  பாகிஸ்தான்முகவர்களும் பயங்கரவாதிகளும் தென்னிந்தியாவுக்கு அனுப்ப்பட்டார்கள்.

    அத்தகைய முயற்சிகளை தடுப்பதற்கு குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் கரையோரங்களிலும் விமானநிலையங்களிலும் பாதுகாப்பை கடுமையாக பலப்படுத்தவேண்டியிருந்தது.

    இலங்கையின் உன்னதமான பூகோள  அமைவிடம் -- இருமருங்கிலும் இந்துசமுத்திரத்தின் கடல் போக்குவரத்து ஒழுங்கைகள்--  இந்தோ - பசுபிக்கில் சீனாவின் கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பின் அத்தியாவசியமான பகுதியாகிறது.அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய கிய நாடுகளை உள்ளடக்கிய  பாதுகாப்பு பேச்சுவார்த்தை கட்டமைப்பில் ' குவாட் ' அமைப்புடன் இந்துசமுத்திர நாடுகள் இணைந்துவிடுவதற்கான சாத்தியம்  குறித்த சீனாவின் விசனமும் அதிகரித்து வருகிறது.சீனாவை நோக்கிய குவாட்டின் இலக்குகள்  இந்தோ பசுபிக்கில் சட்டம் ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட சுதந்திரமான -  திறந்த சர்வதேச ஒழுங்கை உறுதிசெய்வதை நோக்கியவையாக இருக்கின்றன.கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் குறித்த அரசியல் சர்ச்சையொன்று  கொழும்பில் கிளம்பியிருந்தபோது மேயில் சீனாவின் அரசாங்கசபை  கவுன்சிலரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் வீய் ெஃபெங்கீ டாக்காவுக்கும் கொழும்புக்கும் குறுகிய விஜயங்களை மேற்கொண்டிருந்தார்.ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவையும் பிரதமர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்த பிறகு வீய் அமைதியான அபிவிருத்தியும் இருதரப்புக்குமே பயனுடைய சரியான வழியிலான முன்னோக்கிய பாதையிலான ஒத்துழைப்புமே இன்றைய உலகளாவிய போக்கு என்று குறிப்பிட்டதை காணக்கூடியதாக இருந்தது.

  குறிப்பிட்ட சில பிரதான நாடுகள்  குழுக்களை உருவாக்குவதில்  அக்கறைகாட்டுகின்றன ; மக்களின் பொது அபிலாசைகளுக்கு எதிராக செல்கின்றதும் பிராந்திய நாடுகளின்  நலன்களை  பாதிக்கின்றதுமான பிராந்திய மேலாதிக்கத்தில் நாட்டத்தையும் காட்டுகின்றன என்று குவாட் கட்டமைப்பின் பெயரை குறிப்பிடாமல் அவர் சொன்னார்.பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீதுடன் நடத்திய பேச்சுக்களின் போதும் இத்தகைய கருத்தை வெளியிட்டஜெனரல்  வீய் பிராந்தியத்துக்கு  வெளியில் உள்ள வல்லாதிக்க சக்திகள் தெற்காசியாவில் இராணுவக் கூட்டணிகளை அமைத்து மேலாதிக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக பங்களாதேஷும் சீனாவும் கூட்டு முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

   எதிர்வரும் மாதங்களில்  இந்தோ பசுபிக் மூலோபாய சூழ்நிலைகளில்  ஏற்படக்கூடிய  சிக்கல்களுடன் சேர்த்து சீனாவிடமிருந்து பாரதூரமான நெருக்குதல்களை இலங்கை எதிர்நோக்கும் என்பது வெளிப்படையானது.

அத்தகைய சூழ்நிலைகளில், இலங்கையின் பொருளாதாரம் அதன் குவியும் கடன்களை சமாளிக்க போராடும்போது சீனாவின் பணத்தை நாடவேண்டிய நிர்ப்பந்தத்தை தவிர்ப்பது ஜனாதிபதி ராஜபக்சவை பொறுத்தவரை,  மிகவும் கஷ்டமானதாகும்.

 இலங்கையும் இந்தியாவும் அவற்றின் பாதுகாப்பு அக்கறைகளை பொறுத்தவரை பரஸ்பரம் நல்ல புரிந்துணர்வைக் கொண்டுள்ளன.

இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் அட்மிறல் ஜெயந்த கொலம்பகே 2020 நவம்பரில் வெளியிட்ட அறிக்கையொன்றின் பிரகாரம் பொருளாதார அபிவிருத்திக்காக  ஏனைய நாடுகளுடன் காரியமாற்றுகின்ற போதிலும் கூட, இலங்கையின் மூலோபாய பாதுகாப்புக்கொள்கை "இந்தியா முதலில்" என்ற அணுகுமுறை ஒன்றைக்கொண்டிருக்கும் என்பதை  ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச தெளிவுபடுத்திவிட்டார்.

 ஆனால், அத்தகைய உணர்வுகள் இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை மீறுவதை தடுக்கும் என்றில்லை.கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையம் மற்றும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை எண்ணெய் குதங்கள் போன்ற விவகாரங்கள் இதற்கு உதாரணங்கள்.இலங்கையையும் சீனாவையும் சம்பந்தப்படுத்திய முத்தரப்பு உறவுகளைப் பொறுத்தவரை இந்தியா வலுமிக்க மாற்றங்களுக்கு தயாராக வேண்டும்.

 கொழும்பு துறைமுக  நகருக்குள் சீனா அதன் பிரசன்னத்தை வலுப்படுத்தும் நிலையில், இலங்கையின் அரசியல் செயற்பாடுகளிலும் அது செல்வாக்கை அதிகரிக்கும் என்று நாம் எதிர்பார்க்கமுடியும்.

 சில வருடங்களுக்கு முன்னர் இந்தியா இலங்கையில் நடந்து கொண்டதைப் போன்ற  நிலையை ஒத்ததாக , இலங்கையின் கட்சி அரசியலின் தவிர்க்கமுடியாத  அங்கமாக துறைமுக நகரின் செல்வாக்கு வந்துவிடும்.

 சீனாவின் பணப்பலத்துடன் இந்தியாவினால் போட்டிபோட முடியாது என்பதும் அபிவிருத்தி போட்டா போட்டியிலும் கூட பிரிவு பிரிவாகவே வெற்றி பெறக்கூடியதாக இருக்கும் என்பதும்வெளிப்படையானதாகும்.

ஆனால் , இலங்கையுடனான பொதுவான  கலாசார, வரலாற்று உறவுகளை இந்தியாவினால் பலப்படுத்த முடியும்.இதுவிடயத்தில், இலங்கையின் அனுகூலத்துக்கு ஏற்றமுறையில் தமிழர்கள் மத்தியில் நீரிணை ஊடான உறவுகளை இந்தியா ராஜீவ் காந்தி யுகத்தின் தலையீட்டு கட்டத்துக்குப் பிறகு பயன்படுத்தவில்லை.

0/Post a Comment/Comments

Previous Post Next Post