சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணை தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநாச்சி, கௌதாரிமுனை பிரதேசத்தில் சீன நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணை தொடர்பாக இன்று(30.06.2021) மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
2017 ஆம் ஆண்டு காலப் பகுதியில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருந்த அப்போதைய அரசாங்கத்திடம் அவசியமான அனுமதிகளைப் பெற்றுக் கொண்ட குறித்த சீன நிறுவனம், அரியாலைப் பகுதியில் தனியார் காணி ஒன்றினைக் குத்தகைக்கு பெற்று கடலட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையம் ஒன்றினை ஆரம்பித்திருந்தது.
பின்னர், அரியாலை கடல் பிரதேசத்தில் கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலைத்தினையும் அமைத்து செயற்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணை ஒன்றினையும் அமைத்துள்ளார்கள்.
கடலட்டைப் பண்ணைகள் தொடர்பான அனுமதிகள் நக்டா எனப்படும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த சீன நிறுவனத்திற்கான அனுமதிகள் நக்டா நிறுவனத்தின் கொழும்பு தலைமை அலுவலகத்தினால் வழங்கப்படடுள்ளதாக ஊடகங்கள் சில செய்தி வௌயிட்டுள்ளன.
இதுதொடர்பாக ஆராய்ந்து பூரணமான அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
அதேவேளை, விரைவில் குறித்த பிரதேசத்திற்கு நேரடியாக விஜயம் செய்து பிரதேச கட்றொழிலாளர் சங்கம் உட்பட சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி, குறித்த சீன நிறுவனம் தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment