நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் சீன பிரஜை ஒருவர் பருத்தித்துறை- மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் ஈடுபடுவதாக கூறிய நபர் சீன பிரஜை அல்ல எனவும் அவர் இலங்கை பிரஜையே என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்கள் பருத்தித்துறை- மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை ஈடுபடுவதாக சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பிய போதே நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அக்கரைப்பற்றை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் முகமட் முஸ்தபா முகமட் ஹனீபா குடத்தனையில் தமிழ் பெண்ணை திருமணம் முடித்துள்ளார். அவரே அங்கு பணியில் உள்ளார்.
மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சீனா என்ற விம்பம் தேவையற்ற வகையில் கட்டியெழுப்பபடுகிறது.
உள்நாட்டில் இருப்பவர்களுடன் இணைந்தே சீனர்கள் கடற்றொழிலில் கடலட்டை வளர்ப்புகளில் ஈடுபடுகிறார்கள் என்றே நான் நினைக்கின்றேன். எனென்றால் இலங்கை சட்டத்தின்படி வெளிநாட்டவர்கள் இங்கே தொழில் செய்ய முடியாது .ஆகவே உள்நாட்டை சேர்ந்த ஒருவருடன் கூட்டாகவே தொழிலை செய்ய முடியும்.
கடலட்டை உற்பத்திக்கு உள்நாட்டில் பெரிய அளவில் சந்தைவாய்ப்பு இல்லாவிட்டாலும் கூட அதற்கான ஒரு சந்தை வாய்ப்பு வெளிநாட்டிலேயே
காணப்படுகின்றது. ஆகவே தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகளை சீனர்களிடமே எதிர்பார்த்து இருப்பதால் அவர்களை பயன்படுத்த வேண்டிய நிலைமை காணப்படுகின்றது என நான் நினைக்கின்றேன்
அவர்கள் நேரடியாக இங்கு முதலீடு செய்து தொழில் செய்வதால் உள்ளூர் தொழில் முயற்சிகள் பாதிக்கப்படுமாக இருந்தால் அதில் உண்மையிலேயே பிரச்சினை காணப்படுகின்றது. அதேநேரம் உள் நாட்டவர்களுடன் இணைந்து சீனர்கள் தொழில் செய்தால் அதனை நாங்கள் பிரச்சினையாக பார்க்க தேவையில்லை என்றார்.
Post a Comment